தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு சில கண்டீசன்ஸ்! அமலுக்கு வரும் சில புதிய நடைமுறைகள்..
தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் குளறுபடிகள், முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ள நிலையில் புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.
இதன்படி, ஆதார் எண் சரிபார்க்கப்பட்ட கணக்கு வைத்துள்ளவர்கள் மட்டுமே IRCTC வலைத்தளம் மூலமும் மொபைல் செயலி மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும். ஓடிபி மூலம் ஆதார் எண் சரிபார்க்கும் நடைமுறையும் சில வாரங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. தட்கல் பதிவு நடைமுறையில் முதல் அரை மணி நேரத்திற்கு முகவர்கள் முன்பதிவு செய்யமுடியாது என்ற கட்டுப்பாடும் வர உள்ளது.
பயணிகளுக்கு பலன் தரும் வகையில் டிக்கெட் முன்பதிவு திறனும் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது வரை ஒரு நிமிடத்திற்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இது நிமிடத்திற்கு ஒன்றரை லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் TICKET ENQUEIRY எனப்படும் தகவல் விசாரணை திறனும் நிமிடத்திற்கு 4 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது. இது தவிர ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தங்களுக்கு விருப்பமான இருக்கையை தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்பட உள்ளது. ரயில் புறப்படுவதற்கு தற்போது 4 மணி நேரத்திற்கு முன் சார்ட் வெளியிடப்படும் நிலையில் அது இனி 8 மணி நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட உள்ளது.