புதிய வருமான வரி மசோதா தாக்கல் - ’S.I.M.P.L.E ’ எனும் வார்த்தையால் குறிப்பிட்ட நிதியமைச்சர்!
60 ஆண்டுகளாக அமலில் உள்ள தற்போதைய சட்டத்துக்கு பதிலாக எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக புதிய வருமான வரிச்சட்ட மசோதா உருவாக்கப்பட்டு, பிப்ரவரி 1ஆம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
பின் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மசோதா தாக்கலின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர்.
மசோதாவை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், பழைய சட்டத்தில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், எளிமையான நடைமுறைகளுடன் கூடியதாகவும் அனைவருக்கும் புரியும் வகையிலும் இருக்கும் என்றும் புதிய சட்டம் மூலம் வரி தொடர்பான சர்ச்சைகள் குறையும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
“பழைய சட்டம் 800க்கும் மேற்பட்டப் பிரிவுகளைக் கொண்டுள்ள நிலையில், புதிய மசோதா 536 பிரிவுகளை மட்டுமே கொண்டுள்ளது. சொற்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது, பிரிவுகளும் அத்தியாயங்களும் குறைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
ஐந்து முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், அதை S.I.M.P.L.E எனும் வார்த்தையால் குறிப்பிட்டார்.
அதாவது, நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் மொழி (Streamlined structure and language), ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் சுருக்கமான (Integrated and concise), குறைக்கப்பட்ட வழக்குகள் (Minimised litigation), நடைமுறை சாத்தியங்களுக்குட்பட்ட மற்றும் வெளிப்படையான (Practical and transparent), கற்றுக்கொள்ள மற்றும் தகவமைத்துக்கொள்ள (Learn and adapt), திறமையான வரி சீர்திருத்தங்கள் (Efficient tax reforms) எனும் ஐந்து கொள்கைகளின் அடிப்படையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களான காங்கிரஸின் மணீஷ் திவாரி மற்றும் ஆர்எஸ்பியின் என்கே பிரேம்சந்திரன் போன்றோர், “புதிய மசோதா பழைய சட்டத்தினைவிட சிக்கலானது” எனத் தெரிவித்தனர். புதிய சட்டம் வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த மசோதா நாடாளுமன்ற நிதிநிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மார்ச் 10 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு மசோதா தொடர்பான தனது அறிக்கையை சமர்பிக்கும்.