ம.பி.| இந்திய அணி வெற்றியில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி வன்முறை; கைதானவர்கள் மொட்டையடித்து ஊர்வலம்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. இந்த வெற்றியை அடுத்து நாடு முழுவதிலுமுள்ள இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலவரமாக மாறிய கொண்டாட்டம்
மத்திய பிரதேசத்திலும் கொண்டாட்டம் நடந்தது. குறிப்பாக மத்திய பிரதேசம் இந்தூரிலுள்ள தேவாஸ் மாவட்டத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது. இதனை அடுத்து, கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரவு 10.45 மணியளவில் ஜாமா மசூதி அருகே பேரணியாகச் சென்று பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது காவிக்கொடிகளைக் கைகளில் ஏந்தி மத கோஷங்களை எழுப்பியபடியே சென்றுள்ளனர்.
அதேவேளையில் மசூதிகளில் சிலர் இரவு நேர தொழுகைகளில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் தொழுகை முடித்து வெளியில் வந்தபோது, அந்தக் கும்பல், ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதா கி ஜெய் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிய நிலையில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, வன்முறையை கட்டுப்படுத்த வந்த காவல்துறையினருக்கும், இளைஞர்களுக்கும் மத்தியில் கூட மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோவில், காவல்துறையினரின் வாகனத்தை துரத்திச் சென்று அதன்மீது கற்களை வீசுவதுபோன்ற வீடியோக் காட்சிகளும் வெளியாகின.
மோதல் கலவரமாக மாறியதை அடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பல வாகனங்களுக்குத் தீ வைத்தனர். தொடர்ந்து சப்ஜி மார்க்கெட், கன்னாட் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் இருந்த வாகனங்களின் கண்ணாடிகளையும் உடைத்தனர். இதுதொடர்பாகப் பேசிய ஜமா மசூதியின் பொறுப்பாளர், கொண்டாட்டப் பேரணியில் ஈடுபட்டவர்கள் மசூதியைக் கடந்து செல்லும்போது மசூதிக்குள் பட்டாசுகளை வீசியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “முதலில் மசூதி மேல் கற்களை வீசியது கும்பலில் இருந்த ஒருவர்தான்; அது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, சிசிடிவி காட்சிகளை காவல்துறையினரிடம் விசாரணைக்காக கொடுத்துள்ளோம்” என்றும் தெரிவித்தார்.
10 பேர் கைது
இந்த விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமை 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 10 பேரும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், தங்களது கொண்டாட்டத்தை வன்முறைச் செயலாக மாற்றும் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி 2 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுப்படுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு காவல்நிலையத்திலிருந்து சயாஜி கேட் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழும் நிலையில், தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமான குற்றவாளிகள் அல்ல
ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக பேசிய பாஜக எம்.எல்.ஏ காயத்ரி ராஜே புவார், “இளைஞர்கள் நாட்டின் பிற பகுதிகளைப் போலவே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வழக்கமான குற்றவாளிகள் அல்ல. அவர்களை பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றது முற்றிலும் நியாயமற்றது. இந்த விவகாரம் குறித்து எஸ்பியிடம் பேசியுள்ளேன். அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய தேவாஸ் காவல் கண்காணிப்பாளர், “இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணையையும் மேற்கொள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளோம். 7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும். குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.