”2026 சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை” - மம்தா பானர்ஜி
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. ஆனாலும் ’I-N-D-I-A’ கூட்டணி என்ற அமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகச் செயல்படாமல் 'ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு; ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிலைப்பாடு' என்கிற நிலையில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, ’I-N-D-I-A’ கூட்டணியை முழுமையாக ஒழுங்குபடுத்துவதில் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி சட்டசபைத் தேர்தலில் இக்கூட்டணியில் உள்ள காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதையடுத்து, மீண்டும் ’I-N-D-I-A’ கூட்டணி பற்றிய செய்தி விவகாரமெடுத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தனிபெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ’I-N-D-I-A’ கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி - காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதே பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்ததாக, அப்படியெனில் இந்தக் கூட்டணி எதற்கு என மற்ற கூட்டணிக் கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.
இந்த சூழலில், ”அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸுடன் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமைக்கப் போவதில்லை” என அக்கட்சியின் தலைவர் மம்தா பானா்ஜி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவர், ”டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. ஹரியானாவில் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால், அவ்விரு மாநிலங்களிலும் பாஜக வென்றது. ’I-N-D-I-A’ கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில், பாஜகவை வீழ்த்துவது கடினம். அதேசமயம், காங்கிரஸுக்கு மேற்கு வங்கத்தில் எந்தச் செல்வாக்கும் இல்லாததால் திரிணாமுல் தனித்துப் போட்டியிடும். மாநிலத்தில் தொடா்ந்து 4வது முறையாக திரிணாமுல் ஆட்சியமைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது ’I-N-D-I-A’ கூட்டணியில் காங்கிரஸும், திரிணாமூல் காங்கிரஸும் ஒரணியாக இருந்தபோதும், தோ்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் முடிவை மம்தா பானா்ஜி அறிவித்தாா். இதன்பின்னரே, அரவிந்த் கெஜ்ரிவாலும் இத்தகைய முடிவை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு கட்சிகளும் தனித்து நின்று போட்டியிட்டதால் பாஜக மிகச் சாதாரணமாக டெல்லியை கைப்பற்றிவிட்டது.