I-N-D-I-A கூட்டணி | கலைப்பதற்கு ஆர்வம் காட்டும் கட்சிகள்.. என்ன காரணம்?
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. ஆனாலும் ’I-N-D-I-A’ கூட்டணி என்ற அமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகச் செயல்படாமல் 'ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு; ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிலைப்பாடு' என்கிற நிலையில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, ’I-N-D-I-A’ கூட்டணியை முழுமையாக ஒழுங்குபடுத்துவதில் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி சட்டசபைத் தேர்தலில் இக்கூட்டணியில் உள்ள காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. இதையடுத்து, மீண்டும் ’I-N-D-I-A’ கூட்டணி பற்றிய செய்தி விவகாரமெடுத்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பீகாரின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், "மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே ’I-N-D-I-A’ கூட்டணியின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அந்தத் தேர்தலுக்காகவே அத்தகைய கூட்டணி உருவாக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பதிலளித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “எனக்குத் தெரிந்தவரையில், I-N-D-I-A கூட்டணிக்கு காலவரையறை எதுவும் இல்லை. அது நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டும் இருந்தால் அதை, அவர்கள் கலைத்துவிடலாம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில். ”I-N-D-I-A கூட்டணி சிதறி வருவதாக அதில் உள்ள கட்சிகள் நினைத்தால், அதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பு” என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அவர் மேலும், “மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இதுவரை I-N-D-I-A கூட்டணிக் கூட்டம் நடைபெறவில்லை. இது I-N-D-I-A கூட்டணிக்கு நல்லதல்ல. தேஜஸ்வி, மம்தா, அகிலேஷ், உமர் அப்துல்லா ஆகியோர் I-N-D-I-A கூட்டணியே இல்லை என்று கூறுகிறார்கள். இந்த மாதிரியான உணர்வு மக்கள் மனதில் தோன்றினால் அதற்கு கூட்டணியின் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸே பொறுப்பு. இந்தக் கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமே என்றால், அதன்பின் I-N-D-I-A கூட்டணி இனிமேல் இல்லை என அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே I-N-D-I-A கூட்டணி ஆட்டம் கண்டு வருகிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைமை ஏற்றிருப்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் தாம் தலைமை ஏற்கவும் விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு, ஒருசில கட்சிகள் ஆதரவு அளித்திருந்தன. இந்த நிலையில் இவ்விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.