டெல்லி தேர்தல் தோல்வி | ”ஒருவரை ஒருவர் அழிக்கலாமா? அப்படினா கூட்டணி எதற்கு?” - உத்தவ் கட்சி காட்டம்!
தலைநகர் டெல்லிக்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 48 இடங்களில் அபார வெற்றிபெற்று அரியணை ஏற இருக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வென்ற நிலையில், ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸுடன் கூட்டணி இல்லாதது, புதிய மதுபானக் கொள்கை ஊழல், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆடம்பர பங்களா, வடகிழக்கு டெல்லி கலவரம், அடிப்படை வசதிகள் செய்யாதது, யமுனை நீர் பற்றிய பேச்சு உள்ளிட்டவை காரணங்களாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆம் ஆத்மியின் தோல்வி குறித்து மகாராஷ்டிராவின் சிவசேனா (உத்தவ்) கட்சியும் கருத்து தெரிவித்துள்ளது. அது, தனது 'சாம்னா' நாளிதழின் தலையங்கத்தில், “டெல்லியில், ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஒன்றையொன்று அழிக்கப் போராடின, இது பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷாவுக்கு விஷயங்களை எளிதாக்கியது. இது தொடர்ந்தால், ஏன் கூட்டணிகளை உருவாக்க வேண்டும்? i-n-d-i-a கூட்டணியை நாடாளுமன்றத்துக்குள் மட்டுமே காண முடிகிறது. எல்லா இடங்களிலும், தெருக்களிலும் i-n-d-i-a கூட்டணியை காண வேண்டிய நேரம் வந்துவிட்டது. டெல்லியில் 14 இடங்களில் ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் பங்களித்துள்ளது. ஹரியானா தேர்தலிலும் இதைக் காண முடிந்தது. காங்கிரஸ் உள்கட்சி பிரிவுகள் ராகுல் காந்தியின் தலைமையை திட்டமிட்டு குறைத்து மதிப்பிடுகிறதா” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.