maharashtra samajwadi party mla suspended for praising Aurangzeb
அபு அசீம் ஆஸ்மிஏ.என்.ஐ.

மகாராஷ்டிரா | ஒளரங்கசீப்பை புகழ்ந்து பேசியதால் வெடித்த சர்ச்சை.. சமாஜ்வாடி எம்.எல்.ஏ. இடைநீக்கம்!

முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Published on

மகாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளன. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியில் உள்ளனர். மூன்று கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர். இந்த நிலையில், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசியதற்காக மகாராஷ்டிரா சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

maharashtra samajwadi party mla suspended for praising Aurangzeb
அபு அசீம் ஆஸ்மிஏ.என்.ஐ.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அரசா் சத்ரபதி சிவாஜியின் மகனும் மராட்டிய பேரரசருமான சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் வெளியான ‘சாவா’ திரைப்படம் குறித்து ஊடகத்துக்கு அபு அசீம் ஆஸ்மி பேரவை வளாகத்தில் பேட்டியளித்தாா். அப்போது, ”அரசா் ஔரங்கசீப்புக்கும் அரசா் சம்பாஜிக்கும் இடையேயான மோதல் அரசியல் ரீதியானது. ஆனால் ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 24 சதவீதமாக இருந்தது. இந்தியாவை ’தங்கக்கிளி’ என அழைக்கும் அளவுக்கு பொருளாதாரம் வலுவாக இருந்தது’ என்றாா்.

அவரின் கருத்துக்கு மகாராஷ்டிர பேரவை மற்றும் மேலவை என இரு அவைகளிலும் ஆளும் கூட்டணி கடும் எதிா்ப்பு தெரிவித்தது. குறிப்பாக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சில உறுப்பினா்கள் அபு அசீம் ஆஸ்மியை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தினா். இதனால், நேற்று முழுவதும் மகாராஷ்டிர பேரவையின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டம் கூடியவுடன், அபு அசீம் ஆஸ்மியை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மகாராஷ்டிரா சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் அபு அசீமை இடைநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

maharashtra samajwadi party mla suspended for praising Aurangzeb
ஆக்​ரா ​| 17-ஆம் நூற்​றாண்​டில் ஒளரங்கசீப் கட்டிய ‘முபாரக் மன்சில்’ அரண்மனை புல்டோசரால் இடிப்பு!

இதற்கிடையே, தாம் பேசிய கருத்துகளை, அபு அசீம் ஆஸ்மி திரும்பப் பெற்றார். அவர், “எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டுள்ளன. ஔரங்கசீப் ரஹ்மத்துல்லா அலி பற்றி வரலாற்றாசிரியர்களும் எழுத்தாளர்களும் கூறியதையே நானும் கூறினேன். சத்ரபதி சிவாஜி மகாராஜ், சம்பாஜி மகாராஜ் அல்லது வேறு யாரைப் பற்றியும் நான் எந்த இழிவான கருத்தையும் தெரிவிக்கவில்லை, ஆனால் எனது அறிக்கையால் யாராவது புண்பட்டிருந்தால், எனது வார்த்தைகளை, எனது அறிக்கையை நான் திரும்பப் பெறுகிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

maharashtra samajwadi party mla suspended for praising Aurangzeb
அபு அசீம் ஆஸ்மிஏ.என்.ஐ.

ஆனால், அவை உறுப்பினர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் அவரை சட்டப்பேரவையிலிருந்தும் நிரந்தரமாக நீக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். மேலும், தேசிய சின்னங்களுக்கு எதிராக யாரும் பேசத் துணியக்கூடாது என்றும், அவர்களுக்கு எதிராக அவமானகரமான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையே இன்றைய கூட்டத்தொடரின்போது, “சத்ரபதி சிவாஜி மற்றும் சத்ரபதி சாம்பாஜியை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க மாட்டார்கள். அவர்கள், 100 சதவீதம் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அபு அசீம் ஆஸ்மியை ஆதரித்த அவரது கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை, சிவசேனா பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாகச் சாடியுள்ளார். மறுபுறம், ”இது ஒரு அநீதி. எனது இடைநீக்கம் எனக்கு மட்டுமல்ல, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மில்லியன் கணக்கான மக்களுக்கும் ஒரு அநீதியாகும். மாநிலத்தில் இரண்டு வகையான சட்டங்கள் பின்பற்றப்படுகிறதா என்று நான் அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன்? அபு ஆஸ்மிக்கு ஒரு சட்டம், பிரசாந்த் கோரட்கர் மற்றும் ராகுல் ஷோலாபுர்கருக்கு மற்றொரு சட்டமா” என இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நடிகர் ராகுல் சோலாபுர்கர் மற்றும் முன்னாள் பத்திரிகையாளர் பிரசாந்த் கோரட்கர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. முன்னதாக, மராத்தி நடிகர் ராகுல் சோலாபுர்கர், ”மராத்திய மன்னா் சிவாஜி, முகலாயா் பிடியில் இருந்து கூடையில் மறைந்து தப்பியதாக கூறப்படுவது தவறு; அவா் முகலாய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதன் மூலமே சிறையிலிருந்து தப்பினாா்” எனக் கூறியிருந்தார்.

maharashtra samajwadi party mla suspended for praising Aurangzeb
”அம்பேத்கர் ஒரு பிராமணர்” - சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்ட மராத்தி நடிகர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com