”அம்பேத்கர் ஒரு பிராமணர்” - சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்ட மராத்தி நடிகர்!
இந்திய அரசியலமைப்பை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர் அம்பேத்கர். சாதி ஒழிப்புக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர். அதற்காக ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
இந்த நிலையில், மராத்தி நடிகர் ராகுல் சோலாபுர்கர் அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”ராம்ஜி சக்பால் என்ற சாமானிய மனிதரின் குடும்பத்தில் அம்பேத்கா் பிறந்தாா். பின்னா் அவா் ஆசிரியா் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டு, ஆசிரியரின் பெயரான அம்பேத்கா் என்ற பெயரை தானும் பெற்றாா். தனது அறிவை வளா்த்துக் கொள்ளும் திறமையுள்ள அனைவரும் பிராமணா்கள்தான் என்று வேதம் கூறுகிறது. அந்த வகையில், அம்பேத்கரும் பிராமணா்தான். ஏனெனில், அவா் தனது அறிவை வளா்த்துக் கொண்டாா்” என்று பேசியுள்ளாா். ராகுலின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிா்ப்பும், கண்டனமும் எழுந்தது.
இதுதொடர்பாக என்சிபி (சரத்பவார்) சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திர அவ்ஹாத், “ராகுல் சோலாபுர்கர் இப்போது எல்லா வரம்புகளையும் மீறிவிட்டார். அவர் எங்கு பார்த்தாலும் காலணிகளால் அடிக்கப்பட வேண்டும். சாதிய சித்தாந்தங்களால் இயக்கப்படும் அவரைப் போன்றவர்கள்தான் மகாராஷ்டிராவையும் நாட்டையும் நாசமாக்கியுள்ளனர்” எனக் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ராகுல் மன்னிப்பு கேட்டுள்ளாா். அதில், ”நான் தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இனி தேசத் தலைவா்கள் குறித்துப் பேசும்போது மிகுந்த கவனத்துடன் இருப்பேன்” என்று கூறியுள்ளாா்.
முன்னதாக, ”மராத்திய மன்னா் சிவாஜி, முகலாயா் பிடியில் இருந்து கூடையில் மறைந்து தப்பியதாக கூறப்படுவது தவறு; அவா் முகலாய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதன் மூலமே சிறையிலிருந்து தப்பினாா்” என அவர் பேசியது மகாராஷ்டிரத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.