முகேஷ் சஹானி, தேஜஸ்வி யாதவ்
முகேஷ் சஹானி, தேஜஸ்வி யாதவ்pt web

தேஜஸ்வி தான் முதல்வர் வேட்பாளர்.. நீண்ட இழுபறிக்கு பின் வெளியான அறிவிப்பு - பின்னணி என்ன?

பிகார் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்டின் பேச்சுவார்தைக்குப் பிறகு மகா கட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
Published on
Summary

பிகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், வி.ஐ.பி கட்சியின் முகேஷ் சஹானி துணை முதலமைச்சர் வேட்பாளர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளடக்கிய மகா கட்பந்தன் கூட்டணியும் பிகார் 2025 தேர்தலில் நேரடிப் போட்டியில் இருக்கின்றன. மேலும், வியூக வகுப்பாளராக இருந்து புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் பிகார் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

bihar assembly election congress seat sharing updates
பிகார் தேர்தல்PT Web

இந்நிலையில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடுகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, அக்கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மகா கட்பந்தன் கூட்டணியில் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் தொகுதி பங்கீட்டில் ஒருமித்த கருத்துக்கு வரமுடியவில்லை.

முகேஷ் சஹானி, தேஜஸ்வி யாதவ்
பீகார் தேர்தல் | RJD வேட்பாளர் மனு நிராகரிப்பு.. காரணம் என்ன? பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு!

தொகுதிப் பங்கீட்டில இழுபறி

மகா கட்பந்தன் கூட்டணிக்குள் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில், 143 இடங்களில் தேஜஸ்வி யாதவ்-ன் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸ் 61 இடங்களிலும், மீதமுள்ள தொகுதிகளில் சிபிஎம் கட்சிகளும், முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சியும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், மகாகட்பந்தனில் தொகுதி உடன்பாட்டுக்கு கூட்டணி கட்சிகளால் வர முடியவில்லை. பிகாரின் இரண்டு கட்டத் தேர்தலுக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலம் முடிந்தாலும், தொகுதிப்பங்கீட்டில உறுதி செய்யப்படாத 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மகா கட்பந்தன் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. இது மேலும், கூட்டணிக்குள் குழப்பத்தையே ஏற்படுத்தியிருந்தன.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்pt web

முதல்வர் வேட்பாளர் முடிவில் குழப்பம்

தொடர்ந்து, இக்கூட்டணியில் மற்றுமொரு பிரச்சனையாக இருந்து வந்தது மகா கட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது. ராஷ்டிரிய ஜனதா தளம் தொடர்ந்து, முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை முன்னிறுத்தி வந்தாலும், கூட்டணி கட்சிகள் அதை தொடர்ந்து மறுத்தே வந்தனர். இவ்வாறு, பல பிரச்னைகள் இருந்து வந்த நிலையில், மகா கட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முகேஷ் சஹானி, தேஜஸ்வி யாதவ்
பீகார் தேர்தல் | முதல்வர் பதவிக்கான போட்டி.. குறி வைக்கப்படும் நிதிஷ்குமார்?

பிரச்னையை முடித்து வைத்த அசோக் கெலாட் !

பிகார் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், மகா கட்பந்தன் கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்களை களைவதற்காக, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், பாட்னாவில் நேற்று (அக்டோபர் 22) மகா கட்பந்தன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ பேச்சு வார்த்தை சுமூக முடிந்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தொகுதிகளில் மகாகட்பந்தன் கூட்டணி வேட்பாளர்கள் வாபஸ் வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்எக்ஸ்

 இதையடுத்து, இன்று ( அக்டோபர் 23) பாட்னாவில் மகா கட்பந்தன் கூட்டணி கட்சிகள் கூட்டாக கொடுத்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், “பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கட்பந்தனின் முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் இருப்பார். விகாஷீல் இன்சான் கட்சியின் (வி.ஐ.வி) முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக இருப்பார்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு, மகா கட்பந்தன் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் கூட்டணிக்குள் குழப்பம் நிலவிய நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்  அசோக் கெலாட் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தற்போது சுமுக முடிவு வந்துள்ளது.

முகேஷ் சஹானி, தேஜஸ்வி யாதவ்
அடையாளம் முக்கியம் எனும் ராகுல்.. கூட்டணியில் நீடிக்கும் இழுபறி.. என்ன நடக்கிறது மகாகத்பந்தனில்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com