கொல்கத்தா மைதானம் சூறை.. மெஸ்ஸியின் முக்கிய அமைப்பாளருக்கு 14 நாட்கள் போலீஸ் காவல்!
மெஸ்ஸியின் GOAT இந்தியா டூர் 2025இன் விளம்பரதாரரும் முக்கிய அமைப்பாளருமான சதத்ரு தத்தா, தவறான நிர்வாகம் மற்றும் பொது ஒழுங்கீனம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.அவரை, 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
பிரபல கால்பந்து ஜாம்பவானும் அர்ஜெண்டினா அணி வீரருமான மெஸ்ஸி, தற்போது நட்புரீதியாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். The Goat என்று அழைக்கப்படும், இந்தச் சுற்றுப்பயணத்தில் மெஸ்ஸி இந்திய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த வகையில் நேற்று கொல்கத்தா சென்றார். இதையொட்டி, நகரின் சால்ட் லேக் மைதானத்தில் அவா் ரசிகா்களைச் சந்திக்கும் நிகழ்வு நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுக்கு ரூ. 4,000 முதல் ரூ.12,000 வரை கொடுத்து டிக்கெட் வாங்கிய ஏராளமான ரசிகா்கள் மைதானத்தில் திரண்டிருந்தனா். மைதானத்தில் சுமார் 50,000 ரசிகர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தவிர, அவரைப் பார்ப்பதற்காக கறுப்புச் சந்தையில் ரூ.20,000 கொடுத்து டிக்கெட் வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மெஸ்ஸி தனது ஆா்ஜென்டீனா அணியின் மற்ற வீரா்களான லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் ஆகியோருடன் மைதானத்துக்கு வந்தாா். அவா் ஆடுகளத்தில் சிறிது தூரம் நடந்து, மைதானத்தைச் சுற்றி பாா்வையாளா் அரங்கில் நிறைந்திருந்த ரசிகா்களைப் பாா்த்துக் கையசைத்தாா்.
ஆனால், முக்கியப் பிரமுகா்கள், ஏற்பாட்டாளா்கள், பிரபலங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா் மெஸ்ஸியைச் சூழ்ந்துகொண்டதால், ரசிகா்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியும், அவரைக் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனா். மேலும், திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்னரே அவா் மைதானத்தைவிட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து, ஆவேசமடைந்த ரசிகா்கள் மைதானத்தைச் சூறையாடினர். மெஸ்ஸி நிகழ்ச்சியில் காணப்பட்ட நிா்வாகச் சீா்கேடு குறித்து அதிா்ச்சியடைவதாகத் தெரிவித்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, உயா்நிலை விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டாா்.
மேலும், ’குழப்பத்துக்கு காரணமானவா்களைக் கண்டறிந்து, எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைக்கும். விளையாட்டு ரசிகா்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், மெஸ்ஸியின் GOAT இந்தியா டூர் 2025இன் விளம்பரதாரரும் முக்கிய அமைப்பாளருமான சதத்ரு தத்தா, தவறான நிர்வாகம் மற்றும் பொது ஒழுங்கீனம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரை, 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, விசாரணைக் குழு வரும் நாட்களில் தனது ஆய்வுகளை மாநில அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

