முல்லரை வீழ்த்திய மெஸ்ஸி.. முதல்முறையாக MLS கோப்பையை வென்ற இன்டர் மியாமி!
மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி, முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
புளோரிடாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ஃபோர்ட் லாடர்டேல் சேஸ் ஸ்டேடியத்தில் எம்எல்எஸ் கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணியும் முல்லரின் வான்கூவர் வைட்கேப்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இன்டர் மியாமி அணி, தனது ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 2 அசிஸ்ட்கள் போட்டு அசத்தினார்.
ஜெர்மனி அணிக்கு தலைமை தாங்கிய தாமஸ் முல்லர் 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2010 உலகக் கோப்பை காலிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜெடினாவை தோற்கடித்தார். அதேபோல இந்தமுறையும் நடக்குமென அவர் பேட்டி அளித்திருந்த நிலையில், மெஸ்ஸி அதை தவிடு பொடியாக்கியுள்ளார். வெற்றி குறித்து மெஸ்ஸி, “கடந்த ஆண்டு நாங்கள் லீக்கின் ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டோம். இந்த ஆண்டு, MLS-ஐ வெல்வது எங்கள் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இதற்காக, அணி மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டது. இது நான் காத்திருந்த தருணம். ஓர் அணியாக நாங்கள் காத்திருந்தோம். இது எங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

