வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணைய பதிலும்!
தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதாரை இணைப்பது குறித்து ஆலோசிக்க உள்துறைச் செயலர், சட்ட பேரவைத் துறை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார். மார்ச் 18ஆம் தேதி இக்கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, இந்திய தேர்தல் ஆணையம், அனைத்துத் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடமிருந்தும் தேர்தல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் தேர்தல் பதிவு அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அல்லது தலைமை தேர்தல் அதிகாரிகள் அளவிலுள்ள தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்தான ஆலோசனைகளைக் கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சில மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் மோசடிகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண்கள் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும், பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை சுமத்தின.
தனிநபர் பிழைகளே
இதை மறுத்த தேர்தல் ஆணையம், வாக்காளர் சேர்க்கைக்கான டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன் நடந்த தனிநபர் பிழைகள் என விளக்கமளித்தது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வாக்காளர் பதிவு முறையை அறிமுகப்படுத்திய பின்னர், பிழைகளைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அடையாள எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவர்களது பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடிகள் வேறுபட்டுதான் இருக்குமென்றும் தெரிவித்தது. முன்னதாக 2008 மற்றும் 2013 க்கு இடையில், பாஜக தலைமையிலான ஆட்சியில் இல்லாத காலகட்டத்திலும், போலி அடையாள அட்டை பிரச்சனை இருந்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில், வருடாந்திர வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புகளின்போது வாக்காளர் அடையாள அட்டையிலுள்ள அனைத்து முரண்பாடுகளையும் நீக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மின்னணு வாக்காளர் அடையாள அட்டை எண்களின் அனைத்து குறைபாடுகளும் மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு தனிப்பட்ட இபிஐசி எண் உறுதி செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிழைகள் குறையுமா? அதிகரிக்குமா?
வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்துப் பேசிய தேர்தல் ஆணைய வட்டாரங்கள், “வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது, ஒரு வாக்காளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளாரா என்பதை வெளிப்படுத்தும்” எனத் தெரிவிக்கின்றன. ஏனெனில் ஆதார் அட்டைகள் பயோ மெட்ரிக் தரவுகளுடன் இருப்பதால், குறைப்பாடுகளை வெளிப்படுத்திவிடும் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஆதார் தரவு தளத்தில் இருக்கும் பிழைகள், குறிப்பாக பயோ மெட்ரிக் தரவுகள் பெயர் முரண்பாடுகள் போன்றவை தேர்தல் தரவு தளத்தில் உள்ள பிழைகளை விட அதிகம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். போலியான வாக்காளர் அட்டைகளை நீக்குவதை விடுத்து, ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது இந்திய தேர்தல் முறையை பலவீனப்படுத்தி மாசுபடுத்திவிடும் என தெரிவிக்கின்றனர்.
தன்னார்வ அடிப்படையில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு சட்டத்தில் இடமுள்ளது. இதற்கு காலக்கெடுவோ, இலக்கோ நிர்ணயிக்கபடவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் இருந்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயத்தில், ஆதார் விபரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தும் நீக்கப்படாது என்றும் தெரிவித்திருந்தது. 2019-ல், உச்சநீதிமன்றமே ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதற்கு மறுப்பு தெரிவித்து, அதை கட்டாயமாக்க முடியாது எனத் தீர்ப்பளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
2023 ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக பேசியிருந்த தேர்தல் ஆணையம், மொத்தமுள்ள வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தங்களது ஆதார் எண்ணைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல்கள் குறித்து அவையில் விவாதிக்க கோரினார் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.