சமூக தளத்தில் எதிரொலிக்கும் மொழி சர்ச்சை.. மும்பையில் நடப்பது என்ன?
மும்பை புறநகர் ரயிலில் இந்தியில் பேசிய இளைஞரின் தற்கொலை, மகாராஷ்டிராவில் மொழி சர்ச்சையை மீண்டும் தூண்டியுள்ளது. புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் மற்றும் மொழி மோதல்கள் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளன.
மும்பை புறநகர் ரயிலில் பயணித்த 19 வயது இளைஞர் இந்தியில் பேசியதால் ஏற்பட்ட மோதலை அடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மஹாராஷ்டிர மாநிலத்தில் மொழி சர்ச்சையை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியைப் பார்க்கலாம்.
இந்தியாவின் பெரிய நகரமான மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுமார் 90 மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கின்றனர். மாநில மொழியான மராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மும்பையில் 44 லட்சம் பேர். இது மும்பை மக்கள்தொகையில் 35 விழுக்காடு. மும்பையில் 29 விழுக்காடு மக்கள் அதாவது 36 லட்சம் பேர் தங்களை இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டின் இடைப் பகுதியில் பாஜக தலைமையிலான மாநில அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மொழிப்பாடமாக கற்பிக்க உத்தரவிட்டது. உத்தவ் தாக்ரே சிவசேனா மற்றும் ராஜ் தாக்ரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா போன்ற கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக கட்டாய இந்தி உத்தரவை பாஜக அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து அரசியல் களத்தில் மொழி சர்ச்சை சற்று ஓய்ந்திருக்கிறது. ஆனால் சமூகத் தளத்தில் அது தீவிரமாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
மும்பை புறநகர் ரயில்களில் பன்மடங்கு அதிகரித்துள்ள கூட்ட நெரிசலும் இன்னொரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. புறநகர் ரயில்களில் இட நெருக்கடி சார்ந்து பயணிகள் இடையே ஏற்படும் சின்ன சின்ன சச்சரவுகள்கூட இப்போது மொழி சார்ந்த மோதலாக தீவிரமடைவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் இளைஞரின் தற்கொலை இந்தப் பிரச்சினையின் கொடிய விளைவாக முன்வைக்கப்படுகிறது.
ஆனால், இளைஞரின் தற்கொலையை வைத்து இந்தித் திணிப்புக்கு எதிராக போரிட்ட அனைவரையும் வன்முறையாளர்களாக சித்தரிக்கும் அரசியலை பாஜக முன்னெடுப்பதாக மாநில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். மறுபுறம் மொழி உணர்வை வைத்து வன்முறையைத் தூண்டுவதாக எதிர்க்கட்சிகளை ஆளும் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

