செயற்கை கருத்தரித்தல் | கடனில் சிக்கிக் கொள்ளும் 90% தம்பதிகள்., ஆய்வில் தகவல்!
இந்திய சமூகம், திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்தே ஆக வேண்டும் என்ற அழுத்தத்தை காலங்கலாமாக ஒவ்வொருவர் மனதிலும் உருவாக்கி வைத்திருக்கிறது. திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகும்போது அந்த தம்பதிகளின் உறவினர்கள் உட்பட பலரும் கேள்விகளால் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறார்கள். மேலும், இச்சமூகமும் வரலாற்றில் குழந்தை இல்லாத பெண்களை பல நல்ல விஷயங்களில் இருந்து ஒதுக்கியே வைத்திருக்கிறது. இந்த அழுத்தங்கள் காரணமாகவே தம்பதிகள் செயற்கை கருத்தரித்தல் மையங்களை நாட வேண்டிய தேவை இருக்கிறது.
இந்நிலையில்தான், இந்தியாவில் செயற்கைக் கருத்தரிப்பு முறையான ஐவிஎஃப் (IVF) சிகிச்சையை நாடும் 10 தம்பதிகளில் 9 பேர் பெரும் கடன் சுமையில் தள்ளப்படுவதாக ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு ஐவிஎஃப் சுழற்சிக்கான சராசரி செலவு, அரசு மருத்துவமனைகளில் 1.1 லட்சம் ரூபாய் எனவும், தனியார் மருத்துவமனைகளில் 2.30 லட்சம் ரூபாய் எனவும் உள்ளது. இந்த சிகிச்சையை மேற்கொள்பவர்களில் 5 விழுக்காட்டினர் மட்டுமே மருத்துவக் காப்பீடு பெற்றவர்களாக உள்ளனர். இதன் விளைவாக, பாதிக்கும் மேற்பட்ட தம்பதிகள் சிகிச்சைக்காகப் பணம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.
சிகிச்சையின் நிதிச் சுமையைத் தாங்குவதுடன், இந்தத் தம்பதிகள் கவலை, மன அழுத்தம் மற்றும் குறைந்த வாழ்க்கைத் தரம் போன்ற உடல் மற்றும் மனநலப் பாதிப்புகளையும் எதிர்கொள்வதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. சிகிச்சைக்கான செலவு மற்றும் தம்பதிகளின் சுமையைக் குறைக்கும் வகையில், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் ஐவிஎஃப் சிகிச்சையையும் கொண்டுவர ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு ஐவிஎஃப் சுழற்சிக்கான செலவை 81 ஆயிரத்து 332 ரூபாய் என நிர்ணயித்துத் திருப்பிச் செலுத்தும் வகையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

