மராத்தியில் பேசாமல் இந்தியில் பேசிய மாணவர்.. நேர்ந்த சோகம்.. மீண்டும் மொழிப் புயலில் மகாராஷ்டிரா!
மும்பையில் இளைஞர் ஒருவர், தனது ரயில் பயணத்தின்போது மராத்தி மொழி தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தின்போது தாக்குதலுக்கு உள்ளானார். பின்னர், அடுத்த சில நாட்களில் அவமானத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டார். இது, மகாராஷ்டிரா அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், மொழிகள்வாரியாக பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, அவ்வப்போது மொழிப் பிரச்னைகள் ஏற்படுவதுடன் அம்மாநிலங்களில் வசிப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில், மொழிப் பிரச்னையில் கர்நாடகா அடிக்கடி சிக்கிக் கொள்ளும். தற்போது, அதை மகாராஷ்டிரா பிடித்திருக்கிறது. தவிர, மொழிப் பிரச்னையால் இளைஞர் ஒருவரின் உயிரையே பறித்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் கல்யாணைச் சேர்ந்தவர், அர்னவ் கைரே, இவர் அங்கு கல்லூரி ஒன்றில், முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், அவர் நவம்பர் 18 அன்று, உள்ளூர் ரயில் ஒன்றில் பயணித்துள்ளார். அப்போது அவர் மராத்தியில் பேசியதாகக் கூறப்படுகிறது. மராத்திக்குப் பதிலாக அவர் இந்தியில் பேசியதைக் கண்டு சிலர் அவரைத் தாக்கியுள்ளனர். இதனால் அவர், சில நாட்களுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார்.
அவமானமும் அதிர்ச்சியுமே அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் மாறாக, அந்த நபர் ஒரு மராத்தி மொழி பேசுபவராக இருந்தார், அவர் தனது பயணத்தின்போது இந்தியில் பேச அதைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது. பல தசாப்தங்களாக, மாநிலத்தில் மொழி தொடர்பான பதற்றங்கள் அவ்வப்போது தோன்றி வரும் நிலையில், இவ்விவகாரம் மேலும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. மராத்தி மொழி பேசாதவர்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதாக சிவசேனா (UBT) மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) கட்சிகளைக் குற்றம் சாட்டி பாஜக தொண்டர்கள் போராட்டங்களை நடத்தினர். அதேநேரத்தில், சிவசேனாவின் இரு பிரிவுகளும் மராத்தியின் கலாசார முக்கியத்துவத்தை வலியுறுத்தினாலும், மொழியின் பெயரால் தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
முன்னதாக, ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவர் சேவை குறைபாடு தொடர்பான புகாரை கூற சேவை மையத்திற்கு சென்றார். ஆனால் அங்கிருந்த பணியாளர் மராத்தியில் பேச மறுத்ததுடன் இந்தியில் பேச முற்பட்டதாக அந்த வாடிக்கையாளர் குறிப்பிட்ட விவகாரம் பேசுபொருளானது. அதேபோல், ‘மும்பைக்கு ஒரே மொழி இல்லை என்றும், மும்பைக்கு வரும் மக்கள் மராத்தி மொழியை கற்க வேண்டிய கட்டாயம் இல்லை’ எனவும் ஆர்.எஸ். எஸ். தலைவர் பய்யாஜி ஜோஷி கருத்து தெரிவித்திருந்ததும், ”மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள்” என்று மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசியிருந்ததும் விமர்சனங்களை ஏறபடுத்தி இருந்தது.
அதேபோல், மகாராஷ்டிராவில் புதிய கல்விக் கொள்கையை பாஜக கூட்டணி அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. அதாவது, தேசிய கல்விக்கொள்கை 2020இன்படி மகராஷ்டிர பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் இந்தி அல்லது வேறோரு இந்திய மொழி மூன்றாம் மொழிப்பாடமாக கற்பிக்கப்படும் என்று மகராஷ்டிர பாஜக அரசு அறிவித்தது. இதன்மூலம் மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இதற்கு அங்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அரசு அதைத் திரும்பப் பெற்றது.

