”நான் ஹிட் லிஸ்டில் இருந்தேன்.. இந்தியாவைவிட்டு வெளியேறக் காரணமே அந்த தாதா தான்” - லலித் மோடி!
இந்தியாவில் இன்று, மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாகப் பார்க்கப்படும் ஐபிஎல்லை, உருவாக்கி வளர்த்ததில் லலித் மோடியின் பங்கு முக்கியமானது. 2008இல் அறிமுகமான இந்த தொடர், உலக அளவில் பிரபலம் அடைந்ததற்கும், வருமானத்தை ஈட்டுவதற்கும் லலித் மோடியே காரணம்.
பின்னர், 1,700 கோடி ரூபாய் அளவிற்கு லலித் மோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கிரிக்கெட் சம்மேளனத்தில் இருந்து நீக்கப்பட்டார். இவர் மீது குற்றப் பரிவு போலீசார் வழக்கு தொடர்ந்து கைது செய்ய இருந்த நேரத்தில், அதாவது 2010இல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள லலித் மோடி, ”என்மீது எந்த நீதிமன்றத்திலும் வழக்குகள் இல்லை. சட்டப் பிரச்னையும் இல்லை. அப்படி இருந்தால், தயவுசெய்து அதை சமர்ப்பிக்கவும். இருப்பினும், நான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன். காரணம், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் ’மேட்ச் பிக்ஸ்' செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்தார். விளையாட்டில் நேர்மை மிகவும் முக்கியம் என்பதால் மறுத்தேன். இதனால் எனக்கு பல வழிகளில் கொலை மிரட்டல்கள் வந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், “அவரது ’ஹிட்' லிஸ்டில் என் பெயர் இருப்பதாக எனக்கு பாதுகாப்பு வழங்கிய மூத்த போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர். இதன் காரணமாகத்தான் நான் இந்தியாவைவிட்டு வெளியேறினேன். பாதுகாப்புக்காக விமான நிலையத்தில் விஐபி வெளியேறும் வழியைப் பயன்படுத்துமாறு தனது தனிப்பட்ட மெய்க்காப்பாளர் தன்னை வற்புறுத்தினார். 12 மணிநேரம் மட்டுமே பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என போலீஸார் அப்போது தெரிவித்தனர்” என அதில் கூறியுள்ளார்.
தாவூத் இப்ராஹிம் ஹிட் லிஸ்ட்டில் அவர் பெயர் இருந்தது அனைவரும் அறிந்ததே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட, தாவூத்தின் நம்பிக்கைக்குரிய லெப்டினன்ட் சோட்டா ஷகீல் பேட்டி ஒன்றில், ”உலக தாதாவின் அறிவுறுத்தலின் பேரில் ஷார்ப் ஷூட்டர்களின் குழு, லலித் மோடி தங்கியிருந்த தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் தரையிறங்கியது. மோடியை கொல்வதற்கு முயற்சி செய்ய அந்தக் குழுவின் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றனர்” என தெரிவித்திருந்தார். ஆனால், யாரோ கொடுத்த தகவலால் அவர் அங்கிருந்து தப்பினார்.