காங்கிரஸுக்கு என்னதான் ஆச்சு! தொடரும் தோல்விகள்..குறையும் வாக்குச் சதவிகிதம்..7 முக்கியக் காரணங்கள்!
வாக்குச் சதவிகிதத்தை இழக்கும் காங்கிரஸ்
மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி.. காங்கிரஸின் வாக்குச் சதவிகிதம் என்பது சமீபகாலமாகவே சரிந்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவாலேயே, காங்கிரஸின் வாக்குச் சதவிகிதம் அதிகரிக்கிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது காங்கிரஸுக்கு அதன் வாக்குச் சதவிகிதம் என்பது குறைவே. அதைவிட, தற்போதைய தகவல்கள்படி, மேலும் மேலும் குறைந்துவருகிறது. இதற்கு ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களைக் குறிப்பிடலாம். இங்கு எல்லாமே அக்கட்சி, அந்த மாநில கூட்டணிக் கட்சிகளுடேனே இந்த வாக்குச் சதவிகிதத்தைப் பெற்றுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடுகையில், தற்போது அதில் மேலும் அதிகரித்துள்ளது என்பதே நன்றாகத் தெரிகிறது. அந்த வகையில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்திப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
1. அதீத நம்பிக்கை:
ஒவ்வொரு மாநிலக் கட்சிகளுடனும் இணைந்து காங்கிரஸ் போட்டியிடும்போதும், அக்கட்சி அதீத நம்பிக்கை கொள்கிறது. ஆனால், கட்சியிலோ அல்லது கட்சி நிர்வாகிகளிடமோ நிலைமையைச் சரிசெய்வதில்லை. தோல்விக்கு என்ன காரணம் என்பதைப் பார்த்து அதை நிவர்த்தி செய்ய முன்வருவதில்லை. அதில் கவனமும் செலுத்துவதும் இல்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் காங்கிரசுக்கு சாதகமாக வரும் பட்சத்தில், உற்சாகமடையும் அக்கட்சி மூத்த தலைவர்கள் முதல்வர் பதவியை பிடிக்கவும், அமைச்சர் பதவியை பிடிக்கவுமே ஆர்வம் காட்டுகின்றனர். இதுதான் அக்கட்சியில் உள்ள முக்கியப் பிரசனையாக உள்ளது.
2. உட்பூசல் மற்றும் பிளவுகள்:
காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொரு மாநிலத்திலும் கீழ்மட்டம் முதல் மேல் மட்டம் வரை உட்கட்சிப் பூசல் நிலவுகிறது. இதனால், கட்சிக்குள்ளேயே பிளவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, உட்கட்சி மோதல் காரணமாக ஒருவருக்கு இன்னொருவர் ஆதரவு அளிப்பதில் முன்வருவதில்லை. இது, ஒவ்வொரு தேர்தலிலும் நன்றாகவே எதிரொலிக்கிறது. சாதிரீதியாகவும் பிரதிபலிக்கிறது. ஒரு சாதியைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர், இன்னொரு சாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. கட்சியில் உள்ள ஒவ்வொரு நிர்வாகிகளும் பதவியையும், தேர்தல் சீட்டையுமே எதிர்பார்க்கிறார்களே தவிர, யாரும் கீழிறங்கி வேலை செய்வதில்லை. முக்கியமாக, மக்களின் நம்பிக்கையை அளவிற்கு அவர்கள் மத்தியில் இறங்கி பணி செய்வதில்லை. இது, தேர்தல் காலத்தில் நன்றாகவே எதிரொலிக்கிறது.
3. ராகுலின் பிரசாரம்:
ஒவ்வொரு தேர்தலிலும் மூத்த தலைவரின் ராகுல் காந்தியின் பிரசாரமே பேசுபொருளாகிறது. மற்ற தலைவர்கள் பிரசாரத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. உதாரணத்திற்கு, மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் உத்தரப்பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், காங்கிரஸில் அப்படியில்லை. தாக்கம் செலுத்தும் அளவிற்கு காங்கிரஸில் மற்ற தலைவர்கள் பிரசாரம் செய்ததாக தெரியவில்லை.. இதனால் அக்கட்சியில் ஒற்றுமை குறைந்து பலவீனம் அதிகரிக்கிறது.
4. சரியான திட்டமிடல் இல்லை:
கட்சியை வழிநடத்துவதற்கும், தேர்தலின்போது வலிமைமிக்க எதிர்க்கட்சியாகப் போட்டியிடுவதற்கும் காங்கிரஸ் சரியான திட்டமிடலை மேற்கொள்வதில்லை. பாஜகவை விமர்சிக்கும் அளவுக்கு அதைத் தேர்தலில் உடைப்பதற்கான எந்த வியூகத்தையும் அமைப்பதில்லை. மத்திய அரசின் மிரட்டலாலும், தாக்குதலாலும் காங்கிரஸில் உள்ளவர்கள் தங்கள் பதவியைப் பெரும்பாலும் தக்கவைத்துக் கொள்ளவே பயப்படுகின்றனர்.
5. விவசாயிகளின் வாக்குச் சதவிகிதம்
விவசாய சங்கங்கள், காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான வாக்கு வங்கியாக உள்ளது. ஆனால், அவர்களின் பிரச்னைகளுக்காக அவ்வப்போது மட்டும் போராடுகிறது. அதில் ஒருசில மாநிலங்களில் விவசாயப் பிரச்னைகளால் காங்கிரஸ் கட்சியே சிக்கிக் கொள்கிறது. இதனால் எந்த முடிவும் எடுக்கப்பட முடியாமல் தவிக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளு பாஜக, அவர்களுக்கான சில சலுகைகளை அறிவித்து வாக்குகளை அறுவடை செய்துகொள்கிறது. தவிர, கடைசி நேரத்தில் நல்ல திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வாக்குகளைப் பெற்றுவிடுகிறது.
6. இதர சாதி வாக்குகளில் கவனமின்மை
சில இடங்களில் காங்கிரஸ் கடந்த தேர்தலைவிட கூடுதல் ஓட்டு வாங்கியிருந்தாலும், அதனை வெற்றியாக மாற்ற அக்கட்சி தவற விட்டுவிடுகிறது. அங்கெல்லாம், அரசு மீதான அதிருப்தி ஓட்டுகளை, சுயேட்சைகள் மற்றும் பிராந்திய கட்சிகள்தான் வாங்குகின்றன. அதுபோல், மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் சாதி வாக்குகளைக் கைப்பற்றும் நோக்கில் கவனம் செலுத்தும் காங்கிரஸ், இதர சமூகத்தினரின் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் கோட்டைவிட்டு விடுகிறது.
7. மாநிலங்களில் வேலை பார்க்கும் பாஜக
ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்க அமைதியாக இறங்கி வேலை பார்க்கிறது. அம்மாநிலத்தில் என்ன தேவைகள், அங்குள்ள வாக்குகளை எப்படி கைப்பற்றலாம் என்பதில் தேர்தலுக்கு முன்பிலிருந்தே கவனம் செலுத்தத் தொடங்கிவிடுகிறது. அதற்கான கட்டமைப்புகளை அரசு ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் செய்யத் தொடங்கி விடுகிறது. ஆனால், காங்கிரஸில் உட்கட்சிப் பிரச்னையைத் தீர்க்கவே நேரம் சரியாக இருக்கிறது.