தெலங்கானா | 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொலை.. 9 பேர் மீது வழக்குப்பதிவு!
இந்தியாவில் அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் போன்றவை பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக, தெருநாய்கள் குறித்தான விவாதங்கள் சமீப காலங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது மற்றும் தெருநாய்களுக்கான வளாகங்களை மாவட்டம்தோறும் ஏற்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. மேலும், தெருநாய்கள் குறித்தான விவகாரத்தில் பொதுமக்கள் இருதரப்பாக பிரிந்துள்ளனர்.
இந்த நிலையில்தான், தெலங்கானா மாநிலத்தில் தெருநாய்கள் தொல்லை காரணமாக 300-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷ ஊசி போட்டுக் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலங்கானாவின் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி ஆகிய கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு ஜனவரி 6 முதல் 8-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் விஷ ஊசி போட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. நாய்களின் தொல்லை அதிகரிப்பதாகக் கூறி அந்த ஊராட்சிகளின் பொறுப்பாளர்கள், இருவரை வாடகைக்கு அமர்த்தி, தெருநாய்களுக்கு விஷ ஊசி போட்டு அவற்றைக் கொன்றுள்ளனர்.
இதனையடுத்து, கரீம்நகரைச் சேர்ந்த 'ஸ்ட்ரே அனிமல் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா' என்ற தன்னார்வ அமைப்பின் புகாரைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று புதைக்கப்பட்ட நாய்களின் உடல்களைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர். மேலும், இந்தச் செயலில் ஈடுபட்டதாக 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியாக நாய்கள் தொல்லையை ஒழிப்பதாகக் கூறியிருந்ததால், அதை நிறைவேற்றவே இவ்வாறு செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

