"ஆண்களையும் சிறையில் அடைக்கலாமா?" - தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்ற கருத்து.. நடிகை ரம்யா பதில்!
தெருநாய்கள் தொல்லை தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஒரு நாய் எப்போது கடிக்கும் அல்லது கடிக்காது என்பதை யாராலும் கணிக்க முடியாது; நாயின் மனநிலையை எவராலும் படிக்க இயலாது; வருமுன் காப்பதே சிறந்தது. எனவே, பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களை 'நாய்கள் இல்லாத இடங்களாக' மாற்ற வேண்டும்" என வலியுறுத்தியது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த 'கணிக்க முடியாத நடத்தை' என்ற வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடிகையும் எம்.பி-யுமான ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "ஆண்களின் மனதையும் யாராலும் படிக்க முடியாது. ஓர் ஆண் எப்போது பாலியல் வன்கொடுமை அல்லது கொலை செய்வான் என்பது யாருக்கும் தெரியாது. அதற்காக அனைத்து ஆண்களையும் முன்கூட்டியே சிறையில் அடைக்க முடியுமா" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நடிகை ரம்யாவின் இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது. இதையடுத்து ரம்யாவின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, தெருநாய்களையும் மனிதர்களையும் ஒப்பிடுவது தவறு என்றும், ஆண்களை ஒட்டுமொத்தமாகச் சித்தரிப்பது தேவையற்றது என்றும் பலர் விமர்சித்துள்ளனர்.
அதேசமயத்தில், ரம்யாவின் நோக்கம் ஆண்களை இழிவுபடுத்துவது அல்ல; 'எதிர்காலத்தில் ஆபத்து வரலாம்' என்ற யூகத்தின் அடிப்படையில் ஓர் உயிரினத்திற்கு எதிரான ஒட்டுமொத்த நடவடிக்கையை எடுப்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்டவே அவர் இவ்வாறு கூறியுள்ளார் என பலர் ஆதரவு கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விலங்குகள் நல ஆர்வலரான ரம்யா, தெருநாய்களைக் கொல்லவோ அல்லது அப்புறப்படுத்தவோ கூடாது என்பதில் நீண்டகாலமாக உறுதியாக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

