கேரளா | உடல் எடையைக் குறைக்க யூடியூப் பார்த்த மாணவி.. டயட்டில் இருந்ததால் ஏற்பட்ட சோகம்!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்தவர், ஸ்ரீநந்தா. 18 வயதான இவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் தன்னுடைய உடல் எடை அதிகரித்துவிடுமோ என்று பயந்து அதைக் குறைக்க யூட்யூபில் வீடியோக்களைப் பார்த்து உணவுக் கட்டுப்பாட்டை(டயட்) மேற்கொண்டுள்ளார். கடந்த 5 -6 மாதங்களாக டயட்டில் அவர் உணவை முழுவதுமாகத் தவிர்த்து தண்ணீர் மட்டுமே குடித்துள்ளார். தண்ணீர், காய்கறிகள், பழங்களை மட்டுமே சாப்பிட்டுள்ளார். மேலும் அதிகமாக உடற்பயிற்சி செய்துள்ளார். இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரு மாதங்களுக்கு முன்னதாக கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இரு வாரங்களுக்கு முன்னர் அவருடைய ரத்த சர்க்கரை அளவு கடுமையாகக் குறைந்து பின்னர் தலசேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். உணவு உட்கொள்வதைத் தவிர்த்ததால், அவரது செரிமான அமைப்பில் பிரச்சினைகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது, அனோரெக்ஸியா நெர்வோசா என்கிற ஒரு நோயாகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனோரெக்ஸியா நெர்வோசா என்பது உயிருக்கு ஆபத்தான உணவுக் கோளாறு ஆகும். இது குறைந்தபட்ச சாதாரண எடையை பராமரிக்க இயலாமை, எடை அதிகரிப்பு குறித்த பேரழிவு பயம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. ஸ்ரீநந்தாவின் மரணம், அனோரெக்ஸியா நெர்வோசா மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் அதன் பரவலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. முன்னதாக, உணவுக் கோளாறு பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளுடன் தொடர்புடையதாக இருந்தது, ஆனால் சமீபத்தில், இந்த நிலை இந்தியாவிலும் காணப்படுகிறது. இத்தகைய நோயை விரைவாகக் கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.