டெல்லி முதல் குஜராத் வரை.. பாஜகவிடம் தொடர்ந்து அடி வாங்கும் ஆம்ஆத்மி.. அதிர்ச்சியில் கெஜ்ரிவால்!
குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை அனைத்து இடங்களிலும் பாஜகவே அதிக இடங்களில் வாகை சூடியுள்ளது. அதிலும், 15 மாநகராட்சிகளையும் பாஜகவே கைப்பற்றியுள்ளது. இதில் சூரத் மாநகராட்சியில் கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி பெருத்த தோல்வியைச் சந்தித்துள்ளது. இதுதவிர, நகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல்களிலும் அக்கட்சி பெருத்த தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த தோல்வி, அரவிந்த் கெஜ்ரிவாலை அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுறது.
குஜராத்தில் எங்கும் எதிலும் வெற்றிபெற்ற பாஜக
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த ராகவ் சதாவுக்கும் இடையே இருந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், சதாவின் கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ராகவ் சதா அக்கட்சியில் இருந்து விலகியதுடன், தன் சகாக்களான அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோருடன் பாஜகவில் இணைந்தார். இவர்களைத் தவிர, ஆம் ஆத்மியின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், சந்தீப் பதக், அசோக் மிட்டல், ராஜேந்தர் குப்தா மற்றும் விக்ரம் சாஹ்னி உள்ளிட்ட 4 எம்பிக்களும் பாஜகவில் இணைந்தனர். ஒரேநாளில், ஆம் ஆத்மி கூடாரம் கலைக்கப்பட்டதில் அக்கட்சிக்கு பெரிய அளவில் அடி ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை அனைத்து இடங்களிலும் பாஜகவே அதிக இடங்களில் வாகை சூடியுள்ளது. அதிலும், 15 மாநகராட்சிகளையும் பாஜகவே கைப்பற்றியுள்ளது. உண்மையில், ஒவ்வொரு மாநகராட்சியிலும் பாஜக 50% வாக்குகளைப் பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இது, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் வலுவான அஸ்திவாரமாகப் பார்க்கப்படுகிறது.
சூரத்தில் அந்தஸ்தைத் தக்கவைக்காத ஆம்ஆத்மி
இதில் சூரத் மாநகராட்சியில் கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி பெருத்த தோல்வியைச் சந்தித்துள்ளது. அம்மாநகராட்சித் தேர்தலில் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான பாயல் சக்காரியா தோல்வியைத் தழுவியுள்ளார். முந்தைய தேர்தலில் 27 இடங்களை வென்று எதிர்க்கட்சியாக அமர்ந்த ஆம் ஆத்மி, இந்த முறை வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்று அந்த அந்தஸ்தைத் தக்கத் தவறிவிட்டது. இதுதவிர, நகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல்களிலும் அக்கட்சி பெருத்த தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த தோல்வி, அரவிந்த் கெஜ்ரிவாலை அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுறது.
2021 உள்ளாட்சித் தேர்தலில் தனது பலத்தைக் காட்டிய ஆம் ஆத்மி, அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து இடங்களை வென்று இன்னும் பலமாக காலூன்றியது. ஆனால், அதற்குப் பிறகு ஆம் ஆத்மி மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அது வலுவிழக்கத் தொடங்கியிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதன்படி பார்க்கப்போனால், கடந்த ஆண்டு டெல்லியை பாஜகவிடம் இழந்த ஆம் ஆத்மி, தற்போது பஞ்சாபில் மட்டுமே எஞ்சியுள்ளது. கோவாவில், ஆம் ஆத்மி கட்சிக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
காலியாகும் ஆம்ஆத்மி கூடாரம்
எனினும், இந்த முடிவுகள் இரண்டு அம்சங்களைச் சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒன்று, குஜராத்தில் அதன் அடிமட்ட பலம் குறைந்து வருகிறது. மற்றொன்று, தனது ஆதரவாளர்களை அக்கட்சி ஒன்றுசேர்த்து வைத்திருக்க இயலாதது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது குஜராத்தைப் பற்றியது மட்டுமல்ல... பஞ்சாபையும் கவனத்தில் கொள்ளக்கூடியது. அங்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளாக அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். 2024-இல், அல்பேஷ் கதிரியா மற்றும் தர்மிக் மாலவியா ஆகியோருடன் தொடங்கிய பயணம், அதே ஆண்டில், பூபேந்திர பயானி மற்றும் 2025-இல், உமேஷ் மக்வானா வரை நீடித்தது. தொடர்ந்து தற்போது அது வேகம் பிடித்துள்ளது.
அதில் குறிப்பிடத்தகுந்த மாற்றமாய் சமீபத்தில் அரங்கேறிய நிகழ்வு. ஆம், சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்பிக்களில் ஆறு பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். இது ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும், இந்த ஏழு பேரில், பஞ்சாபில் கட்சி தனது முதல் அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியப் பங்காற்றியவர்கள் சந்தீப் பதக் மற்றும் ராகவ் சதா ஆகியோரே ஆவர். ஆம் ஆத்மியின் கூடாரம் நாளுக்கு நாள் காலியாகிவருவதால், அதன் பின்னணியில் பாஜக இருப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டுகிறது. அதேநேரத்தில், அடுத்த ஆண்டு இரண்டு மாநிலத் தேர்தல்கள் நடைபெறும் இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி அழுத்தமான அஸ்திவாரத்தை அமைக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

