15-க்கு 15.. Cong., AAP-ஐ மொத்தமாக காலிசெய்த பாஜக.. குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் அமோகம்!
குஜராத்தின், நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் பாஜக ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சி 15 மாநகராட்சிகளில் உள்ள 1,044 இடங்களில் 856 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் உள்ள 192 இடங்களில் 158 இடங்களை அக்கட்சி வென்றுள்ளது.
15 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக
குஜராத்தில் உள்ள 9,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சித் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 66% சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, பெரும்பாலானவற்றின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் பாஜக ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சி 15 மாநகராட்சிகளில் உள்ள 1,044 இடங்களில் 856 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் உள்ள 192 இடங்களில் 158 இடங்களை அக்கட்சி வென்றது. அதேவேளையில், சூரத்தில் 115 இடங்களைக் கைப்பற்றிய அக்கட்சி, ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களையும், காங்கிரஸுக்கு 1 இடத்தையும் பெற்றுத் தந்தது. ராஜ்கோட்டில் உள்ள 72 இடங்களில் 65 இடங்களையும், வதோதராவில் உள்ள 76 இடங்களில் 69 இடங்களையும் பாஜக கைப்பற்றியது.
மேலும், பவநகர் (52 இடங்களில் 44), கர்மசாத்-ஆனந்த் (52 இடங்களில் 43), காந்திதாம் (52 இடங்களில் 41), மற்றும் ஜாம்நகர் (64 இடங்களில் 54) ஆகிய தொகுதிகளிலும் கட்சி வலுவான வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளது. மேலும் சிறிய மாநகராட்சிகளான போர்பந்தர் மற்றும் மோர்பியில் உள்ள 52 இடங்களையும் (அனைத்து), நதியாட் மற்றும் சுரேந்திரநகரில் தலா 52 இடங்களில் 51 இடங்களையும் வென்றது. நவசாரியில் அக்கட்சி 50 இடங்களையும், மெஹ்சானாவில் 47 இடங்களையும் கைப்பற்றியது. வாபியில், பாஜக 37 இடங்களையும், காங்கிரஸ் 11 இடங்களையும், சுயேச்சைகள் 4 இடங்களையும் கைப்பற்றின. மொத்தத்தில் 15 மாநகராட்சிகளில் உள்ள 1,044 இடங்களில், அக்கட்சி 856 இடங்களை வென்றுள்ளது. இதில் காங்கிரஸ் வெறும் 77 இடங்களையும் ஆம் ஆத்மி உள்ளிட்ட இதர கட்சிகள் 12 இடங்களையும் பெற்றுள்ளன.
நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளிலும் பாஜக ஆதிக்கம்
அதேபோல், 2,030 தொகுதிகளை உள்ளடக்கிய 84 நகராட்சிகளில், பாஜக 1,791 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 414 இடங்களையும், மற்றவர்கள் 144 இடங்களையும் வென்றுள்ளன. அதேபோல், 1,090 இடங்களைக் கொண்ட 34 மாவட்டப் பஞ்சாயத்துகளில், பாஜக 568 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும், மற்றவை 30 இடங்களையும் வென்றுள்ளன. அடுத்து, 5,234 இடங்களைக் கொண்ட 260 தாலுகா பஞ்சாயத்துகளில், பாஜக 2,397 இடங்களையும், காங்கிரஸ் 591 இடங்களையும், மற்ற கட்சிகள் 329 இடங்களையும் வென்றுள்ளன.
இதில், குறிப்பிட்டத்தக்க வகையில் சொல்லப்போனால், சூரத் மாநகராட்சித் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, அதன் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான பாயல் சக்காரியா தோல்வியைத் தழுவியுள்ளார். முன்னதாக மாநகராட்சியில் ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்திருந்த ஆம் ஆத்மி, தற்போது அதன் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது. அதேபோல், பாஜகவின் ஒரு முக்கிய அம்சமாக, கோண்டல் மாநகராட்சியில் உள்ள 44 இடங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இங்கு காங்கிரஸும், ஆம் ஆத்மியும் மண்ணைக் கவ்வியுள்ளது.

