மேகதாது விவகாரம் | தமிழக அரசின் மனு தள்ளுபடி.. விரிவான திட்டம் தீட்டும் கர்நாடகா!
கர்நாடக முதல்வர் சித்தராமையா மேகதாது அணை கட்ட தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை கர்நாடகாவின் வெற்றியாகக் கூறியுள்ளார். தொடர்ந்து, மேகதாது திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்க உள்ளனர். இது தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
கர்நாடகாவின் 2026 - 2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அதில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மற்றும் வனத்துறை அனுமதி கோரும் முன்மொழிவுகள் விரைவில் மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நிதிநிலை அறிக்கைக்கான உரையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியபோது, ”நம் மாநிலத்தின் முக்கியத் திட்டமான மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இதன் அடிப்படையில், மேகதாது அணைக்க்கட்டுவது தொடர்பான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மேகதாது அணை விவகாரம்
கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது, 400 மெகாவாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வது மற்றும் உபரி நீரைச் சேமித்து வைப்பது உள்ளிட்ட நோக்கங்களுடன் 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரியின் குறுக்கே கனகபுரா என்ற பகுதியில் மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. ஆனால், இந்த அணையைக் கட்டும்பட்சத்தில் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு குறையும். மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆரம்பத்திலிருந்தே இந்த அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில்தான், மேகதாது அணை கட்டுவது தொடர்பான ஆரம்பகட்ட திட்ட அறிக்கையை கர்நாடக அரசு உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, மீண்டும் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்கும் முனைப்பில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. அந்தவகையில்தான், இதற்கான அறிவிப்பு கர்நாடக நிதிநிலை அறிக்கையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம், இது தமிழகத்திற்கு வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மீண்டும் சட்டப் போராட்டத்தை தமிழக அரசு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

