இன்றைய இளைஞர்களிடையே காணப்படும் அதீத கோபம்.. குறைக்க வைட்டமின் மாத்திரைகள் உதவுமா..?
நியூசிலாந்து கேன்டர்பரி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், வைட்டமின்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் அடங்கிய மாத்திரைகள் பதின்ம வயதினரின் கோபம் மற்றும் எரிச்சலை குறைக்க சிறந்த தீர்வாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதிக அளவு நுண்ணூட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கடுமையான எரிச்சல் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ள பதின்ம வயதுகாரர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சையாகும் என்று கேன்டர்பரி பல்கலைக்கழக மருத்துவ உளவியல் பேராசிரியர் ஜூலியா ரக்லிட்ஜ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பதின்ம வயதுப் பிள்ளைகளிடம் காணப்படும் கட்டுக்கடங்காத கோபம் மற்றும் எரிச்சல் குணத்தைக் குறைக்க வைட்டமின்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் அடங்கிய சத்துமாத்திரைகள் சிறந்த தீர்வாக அமைவதாக நியூசிலாந்தின் கேன்டர்பரி (Canterbury) பல்கலைக்கழகம் நடத்திய புதிய மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
12 முதல் 17 வயதுடைய 132 சிறுவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், முறையான சத்து மாத்திரைகளை உட்கொண்டவர்களில் 64 சதவீதம் பேரின் நடத்தையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. குறிப்பாக, மிகவும் மோசமான மனநிலை பாதிப்பு கொண்டவர்களிடம் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிகிச்சையானது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், தற்கொலை எண்ணங்களையும் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இந்த ஊட்டச்சத்து சிகிச்சை அதிக பலன் அளிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வழக்கமான மனநல மருந்துகளுக்கு மாற்றாக, பக்கவிளைவுகள் குறைவான மற்றும் எளிய முறையில் கிடைக்கக்கூடிய இந்த சிகிச்சை முறை, இளைஞர்களின் மனநல மேம்பாட்டுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. எனினும் மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

