உச்சநீதிமன்றம், மேகதாது
உச்சநீதிமன்றம், மேகதாது pt web

மேகதாது அணை விவகாரம்.. உச்சநீதிமன்றம் சொன்னது என்ன? தமிழக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஏன்?

மேகதாதுவில் அணை கட்டும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய மத்திய நீர் வள ஆணையம் (CWC) கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
Published on
Summary

மேகதாதுவில் அணை கட்டும் பணிக்கான திட்ட அறிக்கைக்கான அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்ய மத்திய நீர் வள ஆணையம் (CWC) கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. தொடர்ந்து, மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க கோரி கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

மேகதாது அணை
மேகதாது அணைpt web

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல், ”மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு பாதிக்கப்படும். தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் நீர் பாதிக்கப்படும். இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. மேலும், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வரும் உபரி நீர் வேறு ஒரு அணை கட்டுவதால் தடைபடும், குறிப்பாக 80 டி.எம்.சி நீர் தடைபடும். புதிய அணையின் நோக்கமே இந்த நீரை தடுக்க வேண்டும் என்பதே ஆகும். ஏற்கனவே காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன, அதனால் புதிய அணை கட்ட தேவை இல்லை” என வாதத்தை முன்வைத்தார்.

உச்சநீதிமன்றம், மேகதாது
கன்னியாகுமரி | S.I.R-க்கு எதிரான போராட்டத்தை புறக்கணித்த காங். கட்சி! சொன்ன காரணம் இதுதான்!

கர்நாடக மாநிலத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, கர்நாடகா மாநிலம் 177.25 ஆயிரம் மில்லியன் கன அடி நீரைத் தமிழ்நாட்டிற்கு வழங்க கட்டுப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கான நீர் ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் ஏற்படாதபட்சத்தில், தேவையான அனுமதிகளைப் பெற்ற பின்னர், நீர்த்தேக்கத் திட்டத்தைத் தொடர கர்நாடகாவுக்கு உரிமை உண்டு. அணை கட்டப்பட்டாலும், தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரின் அளவை கர்நாடகா உறுதி செய்யும். எனவே, தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதாடினார்.

மேகதாது
மேகதாதுpt web

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேகதாது அணை தொடர்பாக திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க அனுமதி கோருவதை எதிர்த்து தமிழ்நாடு கூறும் அச்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது. மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவு என்பது மேகதாது தொடர்பான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மட்டுமே. திட்ட அறிக்கை (DPR) தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கப்படும் போது அதனை இறுதி செய்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றிடம் கருத்தை கேட்டே, முடிவெடுக்க வேண்டும். காவேரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை காவிரி நதிநீர் சம்பந்தமான அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு நீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காவிரி நதிநீரை திறந்து விட மேலாண்மை ஆணையம் என்ன உத்தரவை பிறப்பிக்கிறதோ அதை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

உச்சநீதிமன்றம், மேகதாது
டெல்லி குண்டு வெடிப்பு... பாதுகாப்பில் கோட்டை விட்டது யார்?., அமித் ஷா-வை சாடும் 'முரசொலி'

”தமிழக அரசு கடுமையான வாதங்களை முன்வைக்கவில்லை” - கே.பழனிசாமி

மேகதாது அணை கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கும் நிலையில், தமிழக அரசு கடுமையான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் வைக்கவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் உச்சநீதிமன்ற அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்காமால், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக வழக்கறிஞர் வில்சன் விளக்கம் !

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசியுள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மேகதாது அணைக்கட்ட எந்த அனுமதியையும் வழங்கவில்லை. திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான அனுமதியை மட்டுமே வழங்கியுள்ளது எனவும்,  தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல், இந்த அறிக்கை மீது மத்திய நீர்வள ஆணையம் முடிவெடுக்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம், மேகதாது
பிஹார் அரசியல் உள்ளும் புறமும் | சமூகம், வரலாறு, அரசியல் குறித்த சிறப்புக் கட்டுரைகளின் தொகுப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com