“மன்னிப்புக் கேளுங்கள்; இல்லைனா படத்துக்கு தடைதான்” - கமல் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு!
செய்தியாளர்: மா.ஜெகன்நாத்
தக் லைஃப்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்தகொண்ட கன்னட நடிகர் சிவராஜ்குமார்::
34 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில், த்ரிஷா, சிம்பு ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார்.
கன்னடம். தமிழ் மொழியில் இருந்து பிறந்தது:
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி கன்னடம். தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்' என்று பேசினார்.
இதையடுத்து கமல் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராகி வரும் நிலையில், கர்நாடக அமைப்பினர் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தாய்மொழியை நேசிக்க வேண்டும். ஆனால், அதற்காக பிற மொழிகளை அவமதிப்பது அநாகரீகமான செயல்:
இந்நிலையில், பெங்களூரில் தக் லைஃப் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியின் போது கமல், சிம்புவை வரவேற்று ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களை, கன்னட அமைப்பினர் கிழித்து வீசும் வீடியோ காட்சிகள் வைராகி வருகிறது.
கமலின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், 'தாய்மொழியை நேசிக்க வேண்டும். ஆனால், அதற்காக பிற மொழிகளை அவமதிப்பது அநாகரீகமான செயல் என்றும் திரை கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு:
அதுமட்டுமின்றி, தனது தமிழ் மொழியை போற்றுவதற்காக நடிகர் சிவராஜ் குமாரையும் சேர்த்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம் என்றும், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து, மத உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார்.. கமல்ஹாசன் உடனடியாக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், 'கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு அது கமலுக்கு தெரியவில்லை' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னடம் குறித்து பேசியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்பு கேட்கவில்லை என்றால் Thug Life படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம் என்று கர்நாடக அமைச்சர் சிவராஜ் தங்கடாகி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “கமல்ஹாசன் கன்னடர்களைப் பற்றி தகாத முறையில் பேசியுள்ளார். கன்னடர்கள் இதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு எழுதுவேன். அவர் எப்படியாவது மன்னிப்பு கேட்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இல்லையெனில், அவரது படங்கள் மாநிலத்தில் திரையிடப்படுவது தடை செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்றார்.