கேரளா | தீவிரமடைந்துவரும் தென்மேற்கு பருவமழை.. வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், வயநாடு, கோழிக்கோடு ஆகிய 2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் ஆலப்புழா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மே 30 தேதி, இடுக்கி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் வரும் 30 ஆம் தேதி வரை அதிதிவிர மற்றும் அதிகன மழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து 24 மணி நேரமும் இயங்கும் வெள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் புன்னம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட இடங்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட பேரிடரில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த பகுதிகள் தற்போது வரை மீண்டுவராமல் அப்படியே உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சூரல்மலையில் உள்ள புன்னம்புழா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. பாய்ந்தோடும் வெள்ளத்தில் ஏற்கெனவே ஆற்றங்கரை ஓரத்தில் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அடித்து செல்லப்பட்ட சூழலில், இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்ட பெய்லி பாலத்தை ஒட்டி ஆற்று நீர் செல்கிறது. இந்த வெள்ளம், அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.