’திட்டமிட்ட செயல்’ - அகமதாபாத் விமான விபத்து குறித்து இத்தாலி நாளிதழ் பரபரப்பு அறிக்கை!
குஜராத்திலிருந்து கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், ‘அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல்’ என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்திலிருந்து கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். விமானத்தில் பயணித்தவர்களைத் தவிர அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி, முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது.
அதில்,’இரண்டு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள், 1 வினாடி இடைவெளியில், உயரத்தில், ஒன்றன்பின் ஒன்றாக கட்ஆஃப் நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக இரண்டு விமானிகள் பேசிய விமானத்தின் காக்பிட்டில் இருந்த குரல் பதிவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பலதரப்பிலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதாவது, இந்த விபத்துக்குக் காரணமாக விமானி இருந்திருக்கலாம் எனக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதற்கு விமான வல்லுநர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மத்திய அரசும் இந்தக் கூற்றை மறுத்திருந்தது. மேலும் தனது மகனின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக விமானி சபர்வாலின் 91 வயது தந்தை, இதுகுறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இந்த நிலையில், ‘அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல்’ என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலிய செய்தித்தாள், அதன் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, விமானி இயந்திர எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை அணைத்ததால் விமானம் சக்தியை இழந்து தரையில் விழுந்ததாக புலனாய்வாளர்கள் நம்புவதாக அது தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரியவருவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அவர் மன அழுத்தத்தில் இருந்தது விபத்து நடந்து ஒரு மாதத்திற்குப் பின் தெரிய வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரியர் டெல்லா செராவின் கூற்றுப்படி , இறுதி விசாரணை அறிக்கையில் விமானிகளின் தொடர்ச்சியான உளவியல் மதிப்பீடு மற்றும் மனநல கண்காணிப்பு குறித்த பரிந்துரைகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அமெரிக்க ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், அகமதாபாத் விமான விபத்துக்கு காரணமான எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளை கேப்டன் அணைத்ததாகச் சுட்டிக்காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அகமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணைக்குழுவில் இருந்த அமெரிக்க நிபுணர்களிடம் இருந்து பெற்ற தகவல்கள் அடிப்படையில் இது தெரியவந்ததாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. எனினும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்னும் அதன் இறுதி அறிக்கையை வெளியிடவில்லை. அது, வரும்போதுதான் உண்மையான விபத்துக்கான காரணம் தெரிய வரும்.

