அகமதாபாத் விமான விபத்து | முதற்கட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு.. விரைவில் தகவல்!
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். இந்தச் சம்பவம் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், விமான விபத்து தொடர்பான தனது முதற்கட்ட அறிக்கையை, விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB), சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விசாரணையின் ஆரம்பகட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணியகத்தின் ஆரம்ப மதிப்பீடு மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, இந்த வார இறுதியில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட அறிக்கையின் விவரங்கள் தெரியவில்லை என்றாலும், விபத்துக்கான காரணம் குறித்து இது முக்கியமான தகவல்களை வழங்கும் என்று நம்பப்படுகிறது.
முன்னதாக, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்த டேட்டாவை எடுக்க அது வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், அதை மறுத்த மத்திய அரசு, உள்நாட்டிலேயே விசாரணை நடத்தப்படும் என கூறியது. இதற்கிடையே நாசவேலை உட்பட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளீதர் மொஹோல் தெரிவித்திருந்தார்.