அகமதாபாத் விமான விபத்து | காணாமல் போன இயக்குநர்.. போலீஸில் மனைவி புகார்!
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். இது தவிர, அங்கிருந்தவர்களில் 33 பேரும் பலியாகி உள்ளனர். இதையடுத்து, அகமதாபாத் விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை இதுவரை 274 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இவ்விபத்தின்போது திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரும் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நரோடாவைச் சேர்ந்த மகேஷ் ஜிராவாலா என்ற இயக்குநர் அகமதாபாத் விமான விபத்து முதல் காணாமல் போயிருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். கலாவாடியா இசை ஆல்பங்களை இயக்கி வரும் அவர், விபத்து நடைபெற்ற அன்று மதியம் லா கார்டன் பகுதியில் ஒருவரைச் சந்திக்கச் சென்றதாகவும், அதன்பின்னர், அவர் வீடு திரும்பவில்லை எனவும் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் மகேஷ் ஜிராவாலா மனைவி ஹெதல், “பிற்பகல் 1:40 மணியளவில் (துரதிர்ஷ்டவசமான விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குப் பிறகு) அவரது தொலைபேசி அணைக்கப்பட்டது. அவரது ஸ்கூட்டரும் மொபைல் போனும் காணவில்லை. வீட்டிற்கு வர அவர் அந்த வழியை (கடைசி இடத்தின்படி) ஒருபோதும் பயன்படுத்தாததால் இவை அனைத்தும் அசாதாரணமானது. விபத்தில் தரையில் கொல்லப்பட்டவர்களில் அவரும் ஒருவரா என்பதைச் சரிபார்க்க நாங்கள் டிஎன்ஏ மாதிரிகளைச் சமர்ப்பித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்திருந்தாலோ அல்லது வேறுவிதமாக சேதமடைந்திருந்தாலோ, கொடூரமான துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை நிறுவ அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.