ஆளுநராக நியமிக்கப்படுகிறாரா எச்.ராஜா?
தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என பாஜக தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மஹாராஷ்டிரா ஆளுநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாகாலாந்து ஆளுநராக பதவிவகித்த இல.கணேசன் சமீபத்தில் காலமானதால், மேலும் ஒரு ஆளுநர் பதவி காலியாக உள்ளது. இது தவிர பல்வேறு மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமிக்கவும், சில ஆளுநர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றவும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அடுத்தடுத்து ஆளுநர் பதவியில் இல்லாமல் போகும் சூழலில், நியமிக்கப்படும் புதிய ஆளுநர்களில் ஒருவர் தமிழராக இருப்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறையே ஆளுநராக பாஜகவின் எச். ராஜா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் அது தள்ளிப்போனது.
இந்த நிலையில் தான் தற்போது காலியாக இருக்கும் இரு மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான ஆலோசனை நிறைவடைந்து உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட இருப்பதாகவும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நிறைவடைந்த உடன் எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் என்கின்றனர் பாஜகவினர்.
மேலும் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தமிழர்களுக்கு பாஜக முக்கியத்துவம் அளிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் விமர்சனத்தை முன் வைக்கின்றன.சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தமிழர்களுக்கு பாஜக முக்கியத்துவம் அளிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் விமர்சனத்தை முன் வைக்கின்றன.