குடியரசு துணைத்தலைவர் தேர்தல் | இந்தியா கூட்டணியின் வேட்பாளராக திருச்சி சிவா அறிவிக்கப்பட வாய்ப்பு!
பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், திடீரென ராஜினாமா செய்தது விவாதத்தை ஏற்படுத்தியது. எனினும், மருத்துவக் காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக அவர் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாஜக, தமிழகத்தைச் சேர்ந்தவரை, வேட்பாளர் ஆக்கியுள்ளநிலையில் எதிர்க்கட்சிகளும் தமிழரை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்தியாகூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து, டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளனர். 5ஆவது முறையாக எம்.பி.யாக இருக்கும் சிவா, திமுக மாநிலங்களவை குழு தலைவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.