இண்டிகோ தாக்கல் செய்த வழக்கு.. திடீரென விலகிய நீதிபதி.. காரணம் என்ன?
இண்டிகோ தாக்கல் செய்திருந்த மனுவை விசாரிக்கப்பட இருந்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, தற்போது அதிலிருந்து விலகியுள்ளார்.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய பணி நேர வரம்பு விதிகளால் இண்டிகோ விமானச் சேவை, கடந்த வாரத்தில் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வழக்கு விசாரணையையும் எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையே, இந்த நிலைமை குறித்து நடவடிக்கை எடுக்க, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ( DGCA), நான்கு விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்ததால், அவர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. விமானச் சேவைகள் ரத்து தொடர்பாக உண்மை காரணங்களை ஆராய, DGCA நான்கு பேர் கொண்ட ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
இந்த குழு, இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸை நேரில் சந்தித்து விளக்கம் கேட்க இருக்கிறது. இண்டிகோவில் தொடர்ந்து தாமதங்கள் மற்றும் ரத்துகள் அதிகரித்து வருவது DGCA கவனத்தை ஈர்த்ததால், அந்த நிறுவனம் மீது கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இண்டிகோ தொடர்பான வழக்கு ஒன்றிலிருந்து நீதிபதி ஒருவர் விலகியுள்ளார். வெளிநாடுகளில் பழுதுபார்க்கப்பட்ட பின்னர், இந்தியாவிற்கு மீண்டும் இறக்குமதி செய்யப்படும் விமான எஞ்சின்கள் மற்றும் பாகங்களுக்கு செலுத்தப்பட்ட சுங்க வரியில் ரூ.900 கோடிக்கும் அதிகமான தொகையைத் திரும்பப் பெறக் கோரி இண்டிகோ நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் ஷைல் ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த வழக்கிலிருந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஷைல் ஜெயின் இன்று திடீரென விலகியுள்ளார். தனது மகன் இண்டிகோவில் விமானியாக பணிபுரிவதால், அந்த விசாரணையிலிருந்து நீதிபதி ஷைல் ஜெயின் விலகியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த வழக்கு டிசம்பர் 19ஆம் தேதி மற்றொரு அமர்வின் முன் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

