”ரூ.40,000 வரை கட்டணம் உயர்ந்தது எப்படி?” - இண்டிகோ விவகாரத்தில் மத்திய அரசை சாடிய டெல்லி நீதிமன்றம்
இண்டிகோ விமானங்கள் திடீரென்று ரத்தானது மற்றும் மக்கள் எதிர்கொண்ட பிரச்னைகள் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய பணி நேர வரம்பு விதிகளால் இண்டிகோ விமானச் சேவை, கடந்த சில நாட்களாகக் கடுமையாகப் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இன்னும் பிரச்னை முழுமை அடையாத நிலையில், அதைச் சரிப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக 1,800 விமானச் சேவைகளை இயக்கி வருவதாகவும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தையும் அவர்களின் உடைமைகளைத் திருப்பித் தந்ததாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், சேவைகள் ரத்து தொடர்பாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தனது தரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளது. எனினும், இண்டிகோவின் 10% விமானச் சேவைகளைக் குறைக்க அவ்வமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் கட்டளையிடப்பட்ட 10% செயல்பாடுகளைக் குறைப்பதற்கு இணங்க, அதன் அனைத்து இடங்களுக்கும் தொடர்ந்து சேவை செய்யும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இண்டிகோ விமானங்கள் திடீரென்று ரத்தானது மற்றும் மக்கள் எதிர்கொண்ட பிரச்னைகள் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி டிகே உபாத்யாயா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம், இண்டிகோ நிறுவனம் மற்றும் மத்திய அரசை கடுமையாக கண்டித்தது.
இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம், ‛‛இண்டிகோ விமானங்கள் அடுத்தடுத்து ரத்தானது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. தவிர, இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இன்றைய நாட்களில் பயணிகளின் விரைவான இயக்கம் பொருளாதாரத்தை செயல்பட வைப்பதற்கான ஒரு முக்கிய அம்சமாகும். நிலைமையை நிர்வகிப்பதில் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுகிறோம் என்றாலும், நெருக்கடி எவ்வாறு முதலில் வெளிப்பட்டது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்.
திடீரென ஒரு நெருக்கடி ஏற்படும்போது பிற விமான நிறுவனங்கள் எப்படி விமான டிக்கெட் கட்டணத்தை ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை வசூலித்து லாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டன? இத்தகைய நிலைமை மோசமானது. இந்தச் சூழல் வர (மத்திய அரசு) நீங்களே அனுமதித்துவிட்டீர்கள். மேலும், பயணிகளுக்கு இழப்பீடு வழங்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? சேவை வழங்குநர்களின் ஊழியர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வதை உறுதி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என மத்திய அரசைக் கடுமையாகச் சாடியது.
அதற்குப் பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “இண்டிகோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என்றார். ஆனால், அதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம் மீண்டும் மத்திய அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியது. தவிர, சிக்கித் தவித்த பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இன்னொரு புறம், விமானச் சேவைகள் ரத்து தொடர்பாக முழுமையான அறிக்கைகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA,இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் மற்றும் அனைத்து தொடர்புடைய துறைகளின் மூத்த அதிகாரிகளும் ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் நாளை (டிச.11) ஆஜராகுமாறும் சம்மன் அனுப்பியுள்ளது. கூட்டத்திற்கு முன்பு அறிக்கையைச் சமர்ப்பிக்கவும், இண்டிகோ துறை சம்பந்தப்பட்ட உயரதிகள் அனைவரும் கலந்துகொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 11 விமான நிலையங்களில் ஆன்-சைட் மதிப்பீட்டிற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

