ஏமன் | கொலை வழக்கில் கேரள நர்சுக்கு மரண தண்டனை.. உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு!
கேரள நர்ஸுக்கு ஏமனில் மரண தண்டனை.. உச்ச நீதிமன்றம் அவசர வழக்கு!
கேரளாவைச் சேர்ந்த இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் ஏமனின் மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று ஒப்புக்கொண்டது. சேவ் நிமிஷா பிரியா அதிரடி கவுன்சில் என்ற அமைப்பு, தூதரக ரீதியாக தனது பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. அதன்படி இந்த மனு மீதான விசாரணையை, ஜூலை 14ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் இணங்கியுள்ளது.
ஷரியா சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இரத்தப் பணத்தை ஏற்க ஒப்புக்கொண்டால், ஒருவரை விடுவிக்க முடியும் என்றும், அந்த விருப்பத்தை ஆராய பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிபதி துலியா, ”அந்த நபருக்கு ஏன் மரண தண்டனை விதிக்கப்பட்டது” என்று கேட்டார். ”அவர் கேரளாவைச் சேர்ந்த இந்திய குடிமகன் என்றும், அங்கு செவிலியராக வேலை தேடிச் சென்றதாகவும், ஆனால், உள்ளூர் நபர் ஒருவர் அவரை சித்திரவதை செய்யத் தொடங்கினார் என்றும், பின்னர் அவர் கொல்லப்பட்ட”தாகவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
யார் இந்த நிமிஷா பிரியா?
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் 2008ஆம் ஆண்டு ஏமனுக்குச் சென்ற அவர், செவிலியாகப் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே 2014ஆம் ஆண்டு சொந்தமாய்க் கிளினிக்கைத் தொடங்கும் வண்ணம், நிமிஷா பிரியா அந்த நாட்டைச் சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரைத் தொடர்புகொண்டார். அதன்பிறகு இருவருக்கும் நிதி தொடர்பாக இடையே பிரச்னைகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக 2016இல் மஹதி அளித்த புகாரின் பேரில் நிமிஷா கைது செய்யப்பட்டார். என்றாலும், பின்னாட்களில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆயினும் அவர்களுக்குள் பிரச்னை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், நிமிஷா, தலால் அபு மஹதியிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்க முயற்சி செய்தார். ஆனால் அந்தச் சம்பவத்தில், தோல்வியுற்ற நிமிஷா பிரியா, மஹதிக்கு மயக்க மருந்து செலுத்தி ஊசி மூலம் கொலை செய்ததாக அவர்மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நிமிஷா பிரியா தப்ப முயன்றபோது அந்நாட்டு போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு, இந்த வழக்கில், அந்த நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்போதிலிருந்து அந்நாட்டுச் சிறையில் நிமிஷா உள்ளார்.
மகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தாயார்
இதற்கிடையே, தன் மகள் நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார். 2023ஆம் ஆண்டு டிசம்பரில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் பிரேமா குமாரி ஏமன் செல்ல அனுமதிக்கப்பட்டார், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் blood money பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் மற்றும் அவரது மகளை தூக்கில் இருந்து காப்பாற்றவும் இந்த அனுமதி வழங்கப்பட்டது. அவரது மகளை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டு வந்தார்.
இதற்காக அங்கு தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். பாதிக்கப்ட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும். இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால் நிமிஷா விஷயத்தில் blood money பேச்சுவார்த்தை முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்தது. இந்த நிலையில்தான் அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அது வரும் 16ஆம் தேதி நிறைவேற்றப்பட இருக்கிறது.