பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது! வாக்குமூலத்தில் பகீர் தகவல்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தகாக இந்திய தூதரக ஊழியர் ஒருவர் உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்யேந்திர சிவால்
சத்யேந்திர சிவால்ட்விட்டர்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றுபவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூரைச் சேர்ந்த சத்யேந்திர சிவால் (27). இவர், இங்கு கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சத்யேந்திர சிவால் பாகிஸ்தான் நாட்டின் ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கு உளவுவேலை பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணம் கொடுத்து, இந்திய ராணுவம் குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு பெற்று வருவதாக, உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவல்களின் அடிப்படையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த வகையில், சத்யேந்திர சிவால் இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் ரஷ்யாவில் பணியாற்றியபோது இந்திய தூதர் என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயிடம் கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: 45 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனை படைத்த அஸ்வின்; ஏமாற்றிய DRS முடிவால் தள்ளிப்போன மற்றொரு சாதனை!!

இதுகுறித்த அறிக்கையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில், பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அமைப்பினர் இந்தியாவின் ராணுவம் தொடர்பான முக்கிய தகவல்களைப் பெறுவதாக, இந்தியாவின் வெளியுறவுத்துறையில் வேலை செய்யும் சில நபர்களிடம் பணத்தாசை காட்டி அவர்களுக்காக வேலை செய்ய தூண்டியுள்ளதாக பல்வேறு ரகசிய தகவல்கள் ஏடிஎஸ்க்கு வந்தன. இதுதொடர்பாக ஏடிஎஸ் மின்னணு சாதனங்கள் மற்றும் நேரடியாக நடத்திய விசாரணையில், சத்யேந்திர சிவால் ஐஎஸ்ஐ அமைப்பினருடன் தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர் பணத்துக்காக பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய ராணுவ அமைப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை ஐஎஸ்ஐக்கு வழங்கியுள்ளார். சத்யேந்திர சிவால் மீரட்டில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு பிரிவு இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவரிடம் விதிகளுக்கிணங்க விசாரணை நடத்தப்பட்டது. அவரால் உரிய பதிலைத் தெரிவிக்க முடியவில்லை. விசாரணையில் சிவால் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தகவல் இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று, கடந்த ஆண்டு இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட்க்கு உளவு சொன்ன மூத்த விஞ்ஞானியான பிரதீப் குருல்கர், மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: Eng Vs Ind| ஸ்டம்ப்களை பறக்கவிட்ட பும்ரா.. பாஸ்பால் அதிரடிக்கு பதிலடி கொடுத்து இந்தியா வெற்றி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com