Eng Vs Ind| ஸ்டம்ப்களை பறக்கவிட்ட பும்ரா.. பாஸ்பால் அதிரடிக்கு பதிலடி கொடுத்து இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணி
இந்திய அணிட்விட்டர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 396 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்னர், முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அவ்வணியில் சாக் கிரவ்லீ 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பின்னர் 143 ரன்களுடன் முன்னிலை பெற்ற இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் அடித்து எல்லோரையும் வியக்கவைத்த ஜெய்ஸ்வால், 2வது இன்னிங்ஸில் 17 ரன்களில் நடையைக் கட்டினாலும், கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருந்த சுப்மன் கில், இந்த இன்னிங்ஸில் சதம் அடித்து ஆச்சர்யப்படுத்தினார். அவருடைய சதத்தால் இந்திய அணி இருநூறு ரன்களைக் கடக்க உதவியது. இறுதியில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை (396+255=651-253=398) வெற்றி இலக்காக நிர்ணயித்தது. `பேஸ்பால்' முறையில், விளையாடும் இங்கிலாந்து அணிக்கு இது மிகவும் குறைவான ரன்களே எனக் கருதப்பட்டது. அதேநேரத்தில், இந்த ரன்களைவைத்து இங்கிலாந்தை வீழ்த்தவேண்டும் என இந்திய அணியும் திட்டமிட்டது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது இங்கிலாந்து அணி. அவ்வணியில் தொடக்க பேட்டர் சாக் கிரேவ்லி மட்டும் அதிகபட்சமாய் 73 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் எல்லாம் களத்தில் நீண்டநேரம் நிலைத்து நின்று விளையாடாதால், அந்த 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஸ்கோர், இந்திய மண்ணில் வந்து விளையாண்ட எதிரணிகளின் 4வது இன்னிங்ஸின் 2வது அதிகபட்ச ரன்னாகவும் பதிவாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை அணி எடுத்த 299 ரன்களே முதல் இடத்தில் உள்ளது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ராவுக்கு, இப்போட்டி மேலும் ஒரு சிறந்த போட்டியாக அமைந்துள்ளது. ஆம், இந்தப் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் அவர் (6+3) 9/91 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதற்குமுன்பு கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9/86 விக்கெட்களையும், இங்கிலாந்து எதிராக 2021ஆம் ஆண்டு, 9/110 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இவ்விரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கான 3வது டெஸ்ட் போட்டி, வரும் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com