45 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனை படைத்த அஸ்வின்; ஏமாற்றிய DRS முடிவால் தள்ளிப்போன மற்றொரு சாதனை!!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
aswin
aswintwitter

இந்தியா - இங்கிலாந்து இடையே டெஸ்ட் தொடர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணியும் 2வது போட்டியும் இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளன. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இவ்விரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, வரும் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய அஸ்வின்

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இன்னிங்ஸில் மட்டும் 3 விக்கெட்கள் எடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாம் நாள் முடிவில் அஸ்வின் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பந்துவீசத் தொடங்கிய அஸ்வின், ஆலி போப் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்தார்.

45 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை முறியடிப்பு

முன்னதாக, பி.எஸ்.சந்திரசேகர் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 95 விக்கெட்கள் வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. அவர் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 1979இல் ஆடி இருந்தார். 45 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத அந்தச் சாதனையை அஸ்வின் தற்போது முறியடித்து உள்ளார். அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய நிலையில், 97 விக்கெட்களுடன் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். இந்தப் பட்டியலில், 92 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே 3வது இடத்திலும் கபில் தேவ், பி.எஸ்.பேடி ஆகியோர் தலா 85 விக்கெட்களுடன் 4வது இடத்திலும், இஷாந்த் சர்மா 67 விக்கெட்டுகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

மேலும், இந்தப் போட்டியில் 3 விக்கெட்கள் வீழ்த்திய அஸ்வின் இன்னும் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தால் 500 டெஸ்ட் விக்கெட் என்ற மைல்கல் சாதனையை படைத்து இருப்பார். அந்த சாதனையை நூலிழையில் தவற விட்டுள்ளார். எனினும் அடுத்த போட்டியில் இந்தச் சாதனையைத் தகர்ப்பார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

அடுத்த போட்டியில் 500 விக்கெட்கள் எடுக்க இருக்கும் அஸ்வின்

முன்னதாக இந்தப் போட்டியில் அஸ்வின் பந்தில் டாம் ஹார்ட்லி ஆட்டமிழக்க, 500வது விக்கெட் கிடைத்துவிட்டது என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் டிஆர்எஸ் முடிவில் அதில் அவுட் இல்லை என தெரியவந்தது. இதனால் அஸ்வினுக்கு 500வது விக்கெட் கிடைக்காமல் போனது. அடுத்த போட்டியில் அஸ்வின், ஒரு விக்கெட்டை எடுத்தால், 500 விக்கெட்டை அதிவேகமாக வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்தியாவை பொறுத்தவரை கும்ப்ளேதான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வின் 97 போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.

இதன்மூலம் அடுத்த டெஸ்டில் அஸ்வின் 1 விக்கெட் எடுத்தால், முரளிதரனுக்கு பிறகு அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் பெறுவார். இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கடந்த 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது இடத்தில் அணில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளிலும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் வார்னே 108 டெஸ்ட் போட்டிகளிலும் இந்த 500 விக்கெட்களை எடுத்துள்ளனர். இதை அஸ்வின் அடுத்த போட்டியில் முறியடிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரன், அனில் கும்ப்ளே, வார்னே மெக்ராத், நாதன் லயான் போன்ற வீரர்கள்தான் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com