பூமியில் உயிர்கள் தோன்றியது எப்போது.? 350 கோடி ஆண்டு பாறை.. இந்தியாவில் கிடைத்த பழமையான சான்று!!
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜார்கண்ட் மாநிலம் சிங்பூம் கிராட்டனில் (singhbhum craton) கண்டறியப்பட்டுள்ள சுமார் 350 கோடி ஆண்டுகள் பழமையான பாறையில், நுண்ணுயிர்களின் செயல்பாட்டைக் குறிக்கும் தடயங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தப் பாறை குவார்ட்ஸ் (Quartz) நிறைந்த ஒரு அடுக்குப் பாறையாகும். இதில் கார்பன் நிறைந்த மிக நுண்ணிய அடுக்குகள், குவார்ட்ஸ் படிவுகளுடன் மாறி மாறி காணப்படுகின்றன. இவை பண்டைய காலத்தில் உருவான நுண்ணுயிர் படலத்தின் அமைப்பை ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ராமன் நிறமாலையியல் மற்றும் கார்பன் ஐசோடோப் ஆய்வுகளின் மூலம், உயிரினங்கள் மேற்கொண்ட கார்பன் மாற்றச் செயல்பாட்டுடன் ஒத்துப்போகும் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது, அந்த பழங்கால நுண்ணுயிரிகள் சூரிய ஒளி மற்றும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கும் ஒளிச்சேர்க்கைக்கான நுட்பமான திறனைப் பெற்றிருந்தன என்பதை நிரூபிக்கிறது என ஆய்வாளார்கள் விளக்கியுள்ளனர்.
முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட பாறைகளில் பழமையான சான்றுகள் கிடைத்திருந்தாலும், இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த இரசாயனக் சான்றுகள் மிகவும் துல்லியமானவை மற்றும் மறுக்க முடியாதவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச்சூழலில் தான், இந்த ஆய்வை அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் ஆய்விதழில் இந்திய, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு விஞ்ஞானிகள் அடங்கிய சர்வதேசக் குழு வெளியிட்டுள்ளது.
இந்தச்சூழலில் தான், பூமியில் உயிரினங்கள் எப்போது, எப்படி தோன்றின என்பதற்கான அறிவியல் புரிதலில், இந்தக் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

