பட்டதாரிகள் அதிகமிருக்கும் நாடு இந்தியா! வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அரசு பின்னடைவு
செய்தியாளர் பாலவெற்றிவேல்
உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட தரவுகள் இந்தியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், உலகளவில் 10 கோடிக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இருக்கும் நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது....
ஆம்! 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 11.3 கோடி பேர் இருக்கும் இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் 9.3 கோடி பட்டதாரிகளுடன் அமெரிக்காவும், 7.9 கோடி பட்டதாரிகளுடன் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 30 வருடங்களில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய இளைஞர் பட்டாளம் உயர்கல்வி தகுதியை பெற்றிருப்பதாக கூறியுள்ள உலக வங்கி, ஆனால் அவர்களுக்கான வேலைவாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்ற கருத்தையும் முன்வைத்துள்ளது. இந்தியாவில் திறன்மிகுந்த பட்டதாரிகள் அதிக அளவில் இருந்தும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை கொடுப்பதில் அரசு பின்னடைவில் இருப்பதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 13.8 விழுக்காடு பேர் வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாக காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குறிப்பாக நகர்புறங்களிலே இளைஞர்கள் வேலையின்மை பிரச்சினையை சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், தேசத்தை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.