செயற்கைகோள் இணைய சேவை.. மாதம் ரூ.850... மஸ்க் அதிரடி..!
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், ஸ்டார்லிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்கி வருகிறது. செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி அதன் மூலம் பூமிக்கு இணைய சேவையை வழங்கும் பணியைத்தான் ஸ்டார்லிங் செய்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் சார்பில் இந்தியாவில் இணைய சேவையை வழங்க கடந்த இரண்டு ஆண்டுகளாக எலான் மஸ்க் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான உரிமத்தை தொலைத்தொடர்பு துறை வழங்கியுள்ளது.
இது இந்தியாவில் வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றுக்குப் பிறகு, இச்சேவையை இந்தியாவில் வழங்க தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனம் ஸ்டார்லிங்க் ஆகும். சேவைகளைத் தொடங்குவதற்கு முன் சட்டப்பூர்வ இடைமறிப்புக்கு ஒத்துழைப்பது போன்ற பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஸ்டார்லிங்க் இணங்க வேண்டும். அடுத்ததாக, இந்தியாவில் பரிசோதனை முறையில் சேவை வழங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். தற்காலிகமாக 15 முதல் 20 நாள்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும்.
பூமியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செயற்கைகோளில் இருந்து இணைய சேவை கிடைக்கும். நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் அதிவேக இணைய சேவையை கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்நிலையில் இந்த இணைய சேவைக்கான கட்டணம் எவ்வளவு என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. கிராமப்புறங்களுக்கும் தங்கு தடையின்றி இணைய சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளரிடம் மாதம் 850 ரூபாய் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ஸ்டார் லிங் நிறுவனம் தரப்பில் கட்டணம் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தியாவில் வணிக ரீதியான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகள் முழுமையாகத் தொடங்குவதற்கு இன்னு சில மாதங்கள் ஆகலாம்.