இனி புது ரூல்ஸ்.. தங்கம் இறக்குமதியில் அதிரடி காட்டிய மத்திய அரசு.. விலை உயரும் அபாயம்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், தங்க இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை புதிய விதிகள் மூலம் மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. அதன்படி, தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் முன் அனுமதி பெற்று தங்கம் இறக்குமதி செய்ய, புதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி மூலமே ஈடுகட்டும் நிலையில், இதன் காரணமாக அதிகளவில் அந்நியச் செலாவணி வெளியேறி வருகிறது. இது, ரூபாயின் மதிப்பில் மேல் நேரடியாக தாக்கம் செலுத்திவரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க உதவும் வகையில், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து மக்கள் முதலீட்டு நோக்கத்திற்காக அதிக தங்கம் வாங்குவதைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பிற துறைகளில் முதலீட்டை ஊக்குவிக்க அரசு திட்டமிடுகிறது. இந்தச் சூழலில், இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அரியவகை உலோகங்களின் சுங்க வரியை 15% உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், தங்க இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளையும் புதிய விதிகள் மூலம் மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. அதன்படி, தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் முன் அனுமதி பெற்று தங்கம் இறக்குமதி செய்ய, புதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனி ஓர் உரிமத்திற்கு அதிகபட்சமாக, 100 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
மேலும், தங்க இறக்குமதி மற்றும் தங்க நகைகள் ஏற்றுமதி தொடர்பான விவரங்களை ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்யவும், இதற்கு பட்டயக்கணக்காளர் சான்று தரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர புதிய கட்டுப்பாடுகளின்படி, இத்திட்டத்தில் முதல்முறையாக விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி மையங்களில் கட்டாயம் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், இறக்குமதி செய்யப்பட்டதில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தை ஏற்றுமதி செய்திருந்தால் மட்டுமே அடுத்தக்கட்ட இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும். வெளிநாடுகளிலிருந்து தாய்நாட்டுக்கு திரும்பும் இந்தியர்கள், தங்கம் கொண்டுவருவதற்கான கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 6 மாதங்களுக்கு மேலாக வெளிநாட்டில் தங்கிவிட்டு திரும்பும் பெண், 40 கிராம் தங்கத்தையும், ஆண் 20 கிராம் தங்கத்தையுமே, வரியின்றி கொண்டுவர முடியும். தகுதி வாய்ந்த பயணிகள் அதிகபட்சமாக 1 கிலோ தங்கம் கொண்டுவரலாம் என்றாலும், அதற்கு 15 விழுக்காடு வரி செலுத்த வேண்டும். அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

