\
INDIA Bloc Faces Challenges as Allies Express Frustration
இண்டியா கூட்டணிPTI

திமுக புறக்கணிப்பு; மம்தா வீழ்ச்சி.. ஆட்டம் காண்கிறதா இந்தியா கூட்டணி?

பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட இந்தியா கூட்டணி, தற்போது கடுமையான பிளவுகளையும் வீழ்ச்சியையும் சந்தித்து வருகிறது. திமுகவின் புறக்கணிப்பு, பிராந்திய கட்சிகளின் அதிருப்தி என இக்கூட்டணி எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து பார்க்கலாம்.
Published on
Summary

தமிழ்நாட்டில் தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, திமுக இந்தியா கூட்டணி ஆலோசனையை புறக்கணித்துள்ளது. இதேசமயம், மம்தா பானர்ஜியின் திரிணமூல், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சிவசேனா, என்.சி.பி போன்ற கட்சிகளின் பலவீனமும் கூட்டணியின் எதிர்காலத்தை மங்கலாக்குகிறது.

2024 மக்களவைத் தேர்தலில் 234 இடங்களைக் கைப்பற்றி, ஆளும் பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது இந்தியா கூட்டணி. பாட்னாவில் தொடங்கி பெங்களூரு வரை 28 கட்சிகள் கைகோர்த்து நின்ற அந்த ஆரம்பகால எழுச்சி, தற்போது பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கூட்டணியின் அஸ்திவாரமாக இருந்த தமிழ்நாட்டில், காங்கிரஸ்-திமுக உறவில் ஏற்பட்டுள்ள முறிவு, தேசிய அளவில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததால் ஏற்பட்ட விரிசல் காரணமாக, திங்கட்கிழமை டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனையை புறக்கணிப்பதாக திமுக அதிரடியாக அறிவித்துள்ளது.

ராகுல் - ஸ்டாலின்
ராகுல் - ஸ்டாலின்web

மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் திமுக பங்கேற்காத நிலையில், விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் பங்கேற்கின்றன. ஒருபுறம் திமுகவின் புறக்கணிப்பு என்றால், மறுபுறம் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் தோல்விக்குப் பின் பெரும் பிளவுகளைச் சந்தித்து வருகிறது. கேரளாவில் தங்களது கடைசி கோட்டையையும் இடதுசாரிகள் இழந்து நிற்க, டெல்லி தோல்வியால் ஆம் ஆத்மியின் செல்வாக்கும் சரிந்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, என்.சி.பி கட்சிகளின் உடைப்பு எனப் பிராந்திய கட்சிகளின் பலவீனமும் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியை முடக்கியுள்ளது.

அதேபோல், இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த பிஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு, தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ளது. மேலும் உத்தரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம், அப்னா தளம், பிஹாரில் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. பிராந்திய கட்சிகளின் அதிருப்தியும், காங்கிரஸின் மாநில அரசியல் நகர்வுகளும் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

INDIA Bloc Faces Challenges as Allies Express Frustration
மணிப்பூர் கலவரம் நடந்து 3 ஆண்டுகள்.. முகாம்களில் 731 பேர் உயிரிழப்பு.. RTI மூலம் அதிர்ச்சித் தகவல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com