மணிப்பூர் கலவரம் நடந்து 3 ஆண்டுகள்.. முகாம்களில் 731 பேர் உயிரிழப்பு.. RTI மூலம் அதிர்ச்சித் தகவல்!
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையின்தாக்கம் 3 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், இந்த மோதலால் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 731 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்பட்ட இந்தத் தகவல், மணிப்பூரில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியின் தீவிரத்தையும், ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத நிலையையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. குறிப்பாக, குகி சமூக மக்கள் வாழ்ந்த ஒரு கிராமம் அழிக்கப்பட்டு, அச்சமூகத்தை சார்ந்த இரண்டு பெண்களை மெய்தேய் சமூக ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்து.
மேலும், இந்த இன மோதல்களில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கிட்டத்தட்ட 60 ஆயிரம் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த ஊரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் மணிப்பூர் மாநிலம் முழுவதும் அரசால் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சமடைந்த நிலையில், பலர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தசூழலில் தான், மணிப்பூரைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளரும் ஹரேஷ்வர் கோஷ்வாமி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) மூலம் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு, அம்மாநில உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதன்படி, வன்முறையால் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் தங்கியிருந்த 731 பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர் என்றும் தற்போது கூட 43,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் நிவாரண முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறியிருக்கிறது.
அதேபோல, இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் எதிர்கொள்ளும் சுகாதார சவால்களையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. அதன்படி, மணிப்பூரின் இம்பால் கிழக்கில் மட்டும் 217 பேர் இறுதிக்கட்ட அல்லது குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இம்பால் மேற்கில் 41 நோயாளிகளும், பிஷ்ணுபூரில் 26 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர் எனவும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது. அதேசமயம், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு, உரிய மருத்துவ சிகிச்சை, சக்கர நாற்காளிகள், அறுவை சிகிச்சைக்கான நிதியுதவிகள் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு, மணிப்பூர் கலவரம் நடந்து மூன்று ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும், அம்மாநில மக்கள் இன்னும் முழுமையாக இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் வாழ்க்கையைத் தொடரும் சூழல் நீடித்து வரும் நிலையில், மறுவாழ்வு, பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகள் அரசு விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

