ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிறுவர்கள்.. விமானப்படை மூலம் மீட்பு!
உத்தரபிரதேசம் மாநிலம் சித்தார்த் நகர் காசிராம் காலனி பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டி ஒன்றின் மீது ஐந்து இளைஞர்கள் வீடியோ எடுக்க ஏறியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகத் தொட்டியின் ஏணி உடைந்து விழுந்தது. ஏணி உடைந்ததில் மூன்று இளைஞர்கள் கீழே விழுந்தனர். இதில் சித்தார்த் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். ஷனி மற்றும் கோலு ஆகிய இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏணியின் மேல் பகுதி உடைந்ததால், பவன் மற்றும் கல்லு ஆகிய இரு இளைஞர்கள் தொட்டி மீது இறங்க முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இரவு முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் NDRF குழுவினர் அவர்களை மீட்க முயன்றனர். தற்காலிகச் சாலை அமைத்து வாகனங்களைக் கொண்டு செல்ல முயன்றபோது, அதிகாலை 3:00 மணியளவில் பெய்த மழையால் அந்த முயற்சி தடைபட்டது. இதையடுத்து, மாநில அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய விமானப் படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. இன்று காலை 5:20 மணியளவில் அங்கு வந்த விமானப் படை வீரர்கள், சுமார் 15 நிமிடங்களில் இரு இளைஞர்களையும் பத்திரமாக மீட்டு கோரக்பூருக்கு அழைத்துச் சென்றனர்.
சமூக வலைதளங்களில் புகழ்பெற்றாக வேண்டும் என்ற நோக்கில், பாதுகாப்பற்ற இடங்களுக்குச் சென்று இளைஞர்கள் இது போன்ற ஆபத்தான காரியங்களில் ஈடுபட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த மீட்புப் பணியில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் எனப் பல துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

