உ.பி | கம்பத்தில் கட்டி வைத்து ராணுவ வீரர் மீது கொடூரத் தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ
-சீ.பிரேம்
கபில் கவாட் என்பவர் இந்திய ராணுவத்தில் ராஜ்புத் படைப்பிரிவில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர், விடுமுறை முடிந்த பிறகு மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கு ஸ்ரீநகருக்கு விமானம் ஏறுவதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் மீரட்-கர்னல் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கபில் கவாட் சென்ற கார் பூனி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்ட வரிசையில் நின்றுள்ளது. பின்னர் தனக்கு விமானம் தாமதமாகி விடும் என்ற பதட்டத்தில் காரில் இருந்து இறங்கிய கபில் சுங்கச்சாவடி பணியாளர்களிடம் பேசியுள்ளார். பின்னர், இது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது.
ஒரு கட்டத்தில் சுங்கச்சாவடி பணியாளர்கள் ராணுவ வீரரை தாக்கினர் பின்னர் தடுப்பதற்காக வந்த கபிலின் குடும்பத்தினரையும் தாக்கியுள்ளனர். இச்சம்பம் குறித்து உறவினரின் புகாரைத் தொடர்ந்து சரூர்பூர் காவல் நிலையத்தில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
இதற்கிடையில், ராணுவ வீரரை கம்பத்தில் கட்டி வைத்து சுங்கச்சாவடி பணியாளர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ராகேஷ் மிஸ்ரா, ”ராணுவ வீரர் தாக்கப்பட்டது குறித்து சரூர்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இதுவரை நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
ராணுவ வீரர் ஒருவர் குடும்பத்துடன் தாக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.