S.I.R. திருத்தம் | குஜராத்தில் 73.73 வாக்காளர்கள் நீக்கம்!
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்தத்திற்குப் பிறகு, குஜராத மாநிலத்தில் கிட்டத்தட்ட 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட இப்பணி, 2வது கட்டமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, வாக்களர்களின் வீடுகளுக்கே சென்று எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு பெறப்பட்டன. தொடர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி எஸ்.ஐ.ஆர் பணிகளின் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 14 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுத்திருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்தத்திற்குப் பிறகு, வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளி்யிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலத்திற்கான திருத்தப்பட்ட முதல் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 73 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முன்பு, மாநிலத்தில் மொத்தம் 5,08,43,436 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 4,34,70,109 ஆக உள்ளது. வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் மூலம் மொத்தம் 73,73,327 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நீக்கத்தில் இறந்த வாக்காளர்கள் 18,07,278 பேர் எனவும், வாக்காளர்கள் இல்லாதவர்கள் 9,69,662 பேர் எனவும், நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 40,25,553 எனவும் இரண்டு இடங்களில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் 3,81,470 எனவும் பிற வகையில் 1,89,364 பேர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ஆம் தேதி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் வரைவுப் பட்டியலின்படி, 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். அதற்கு முன்பு மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களும், புதுச்சேரியில் 85,531 பேர் வாக்காளர்களும் நீக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

