SIR வரைவுப் பட்டியல் | 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்... அரசியல் தலைவர்களின் தொகுதிகள் நிலவரம் என்ன?
இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், 2வது கட்டமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, வாக்களர்களின் வீடுகளுக்கே சென்று எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு பெறப்பட்டன. தொடர்ந்து, டிசம்பர் 4 ஆம் தேதி எஸ்.ஐ.ஆர் பணிகளின் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 14 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்தத்தின் பிறகு, இன்று வாக்காளர் வரைவுப்பட்டியல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, மேற்கு வங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதில், ஏறத்தாழ 58,00,000 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று தமிழகத்தில் மாவட்ட வாரியாக வெளியாகியிருக்கும் வாக்காளர் வரைவுப் பட்டியலின் படி, 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் போன்றவை நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும், இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம் எனவும் வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in என்ற இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ள தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் நிலவரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் 1,03,812 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சேப்பாக்கம் தொகுதில் 89,241 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில், 26,375 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியில் 31378 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸின் திருவரம்பூர் தொகுதியில் 39,983 வாக்களர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் திருச்சி மேற்கு தொகுதியில் 57,339 வாக்காளர்கள் நீக்கபட்டுளனர். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை சட்டமன்றத் தொகுதியில் 42119 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதியான மதுரை மேற்கில் அதிகபட்சமாக 56,116 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தொகுதியான போடிநாயக்கனூரில் 24,386 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். குறைவான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள தொகுதி போடிநாயக்கனூர் தொகுதி தான்.

