குஜராத் அமைச்சரவை|துணை முதல்வரான ஹர்ஷ் சங்கவி.. அமைச்சரான கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி!
குஜராத்தில் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. அதில், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன்மூலம் பூபேந்திர படேல் 2ஆவது முறையாக முதல்வர் பதவியை தக்கவைத்தார். இந்த நிலையில், 2027ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு, தொகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் எனச் செய்திகள் வெளியாகின. அதன்படி, முதல்வர் பூபேந்திர படேலை தவிர அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 16 அமைச்சர்களும் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், குஜராத்தில் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.
அந்த வகையில், 2022 சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளரை 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மகத்தான வெற்றியைப் பெற்ற ஹர்ஷ் சங்கவி, துணை முதல்வராகப் பதவியேற்றார். அவர், துணை முதல்வராக பதவியேற்றதன் மூலம், மாநில வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் இளையவர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு வயது 40.
அவரைத் தொடர்ந்து, ஹர்ஷ் சங்கவி, நரேஷ் படேல், தர்ஷ்னா வகேலா, பிரத்யுமன் வாஜா, காந்திலால் அம்ருதியா, மனிஷா வக்கீல், அர்ஜுன் மோந்த்வாடியா, ஜிது வகானி, கெளசிக் வெகாரியா, ஸ்வரூப்ஜி தாக்கூர், டிரிகாம் சாங்கா, ஜெய்ராம் கமித், ரிவாபா ஜடேஜா, பிசி பரண்டா, ரமேஷ் கட்டாரா, ஈஸ்வர் சிங் படேல், பிரவீன் மாலி, ராமன்பாய் சோலங்கி, கமலேஷ் படேல், சஞ்சய் சிங் மஹிதா என 21 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவும் அடக்கம். மேலும் கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த போர்பந்தர் எம்எல்ஏ அர்ஜுன் மொந்த்வாடியாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவையின் சாதி அமைப்பில் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த எட்டு அமைச்சர்கள், ஆறு பட்டிதர்கள், நான்கு பழங்குடியினர், மூன்று பட்டியல் சாதியினர், இரண்டு க்ஷத்திரியர்கள் மற்றும் பிராமண மற்றும் ஜெயின் (லகுமதி) சமூகங்களைச் சேர்ந்த தலா ஒருவர் இடம்பெற்றுள்ளனர். புதிய குஜராத் அரசாங்கத்தில் எட்டு கேபினட் அமைச்சர்கள், இரண்டு தனிப் பொறுப்பு இணையமைச்சர்கள் மற்றும் ஆறு இணையமைச்சர்கள் இடம்பிடித்து உள்ளனர். பழைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கனுபாய் மோகன்லால் தேசாய், ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல், குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா மற்றும் பர்ஷோத்தம்பாய் ஓதவ்ஜிபாய் சோலங்கி ஆகியோரின் ராஜினாமா ஏற்கப்படவில்லை மற்றும் அவர்கள் அமைச்சரவையில் தக்கவைக்கப்பட்டனர்.