குஜராத் அரசியலில் திருப்பம் | 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா... பாஜக-வின் பிளான் என்ன?
குஜராத் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் காரணம் என்ன ? விரிவாகப் பார்க்கலாம்.
குஜராத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. 16 அமைச்சர்களைக் கொண்ட குஜராத் அமைச்சரவையை தீபாவளிக்கு முன் விரிவாக்கம் செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் பூபேந்திர படேல் அமைச்சரவை செய்யவுள்ளார். இதையடுத்து, குஜராத் அமைச்சரவையில் முதலமைச்சரைத் தவிர மற்ற 16 அமைச்சர்களும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதுகுறித்து ராஜினாமா செய்த அமைச்சர்கள் தெரிவிக்கும்போது, முதலமைச்சர் தனது விருப்பப்படி அமைச்சரவையை மாற்றி அமைக்க வசதியாக ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் வழங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாளை காலை விரிவாக்கம் செய்யப்படவுள்ள பூபேந்திர படேல் அமைச்சரவையில் பல புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் புதிய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமைச்சரவை விரிவாக்கத்துடன், மாநில அரசின் முக்கியமான இலாகாக்கள் மறுபகிர்வு செய்யப்படும், இதில் அமைச்சர்களின் கூடுதல் பொறுப்புகள் குறைக்கப்பட்டு, பணிகள் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் யார் யாரின் ராஜினாமாக்களை ஏற்பது ? யாருடையை ஏற்க வேண்டாம் ? என முதல் அமைச்சர் ஆலோசித்து ஏற்றுக்கொள்வார். குஜராத் அமைச்சரவையில் அனைத்து பிராந்தியங்களுக்கும் சரியான முறையில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று ஆளும் பாஜக அரசு முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. அதேபோல, அனைத்து தரப்பினரும் சரியான விகிதத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவும் புதிய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் முதலமைச்சர் யார் யாருக்கு எந்தெந்த பதிவி கொடுக்க வேண்டும் என முடிவெடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.